சென்னை: பல துறைகளிலும் இன்றைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழி நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்து வழங்கின.
கடந்த சனிக்கிழமை (மே 18) நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 10-வது தொடர் நிகழ்வில் ‘ரோபோட்டிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் & விர்ச்சுவல் ரியலிட்டி துறையிலுள்ள வாய்ப்புகள்’ தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
சென்னை விஐடி, ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியர் ஜி.முரளிமோகன்: மெக்கட்ரானிக்ஸ் எனும் துறையானது 3-வது தொழில் புரட்சியின்போது உருவான ஒரு துறையாகும். நமது தேவைக்கேற்ப அதிகமான உற்பத்தியை உருவாக்கும் பணிகளைத் தானியங்கி மூலமாகச் செய்ய வேண்டியதன் அடிப்படை தேவையில் இத்துறை இன்றைக்கு வளர்ந்துள்ளது.
பெங்களூரு ஏஆர்கே இன்ஃபோசொலூசன்ஸ் பி.லிட்., கண்ட்ரி மேனேஜர் (HE) ஜெ.விஸ்வேஸ்வரன்: நாம் தற்போது ‘சைபர் பிஷிக்கல் சிஸ்டம்’ எனும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். முந்தைய தொழில் புரட்சிகளினால் விளைந்த அனைத்தின் பயன்களையும் ஒருங்கே கொண்டதாக தொழில்புரட்சி 4.0 விளங்குகிறது. முன்போலின்றி 2030-ம் ஆண்டிலேயே 5.0 தொழில்புரட்சி வருமெனக் கூறப்படுகிறது.
நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: வாகனத் தொழிற்சாலைகளில் வாகனங்களுக்கு வண்ணம் பூசுதல், பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தல், மனிதர்கள் தொட்டு வேலைசெய்யத் தயங்கும் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்தல் உள்ளிட்ட பல செயல்களை இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் செய்து வருகின்றன. ரோபோட்டிக்ஸ் துறையின் தாய் துறையாக இருப்பது மெக்கட்ரானிக்ஸ் துறையாகும். இவ்வாறு அவர்கள் பேசினர்.