சென்னை: இந்திய திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற, இந்தியா ஸ்கில்ஸ் 2024 போட்டியில், தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 40 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில், தேசிய அளவில் தமிழகம் 3-வது இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பம் சார்ந்து திறன் போட்டிகள் தேசிய அளவில் நடைபெற்றது. குறிப்பாக, மொபைல் ரோபோடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள யசோதாபூமி, துவாரகாவில் நடைபெற்ற இந்த போட்டிகளில், தேசிய அளவில் ஒடிசா முதலிடமும், கர்நாடகா 2-வது இடமும், தமிழகம் 3-வது இடத்தையும் பிடித்தன.
தமிழகத்தில் இருந்து இப்போட்டிகளில், 86 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம், 17 திறன் மிகுந்தவர்களுக்கான பதக்கம் உள்ளிட்ட 49 பதக்கங்களை வென்றனர்.
பங்கேற்பதில் முதலிடம்: இப்போட்டியில், தென் மாநிலங்களில் இருந்து அதிகளவில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், போட்டியாளர்கள் அதிகம் பங்கேற்ற மாநிலத்தில் தமிழகம் முலிடத்தில் உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு துறைகளில் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய திறன் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர்கள் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் உலக திறன் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸின் லியான் நகரில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.