சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 7.60 லட்சம் பேரில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.56 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டைவிட 0.53 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,478 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத தமிழகம், புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 72,363 பள்ளிமாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 52,165 மாணவர்கள், 4 லட்சத்து 8,440 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7 லட்சத்து 60,606 பேர் தேர்வு எழுதினர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 83 மையங்களில் கடந்த ஏப்ரல் 1-ல் தொடங்கி 13-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, தேர்வுத் துறை இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
அதன்படி, பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 3 லட்சத்து 25,305 மாணவர்கள், 3 லட்சத்து 93,890 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7 லட்சத்து 19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.56 சதவீத தேர்ச்சி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.53 சதவீதம் அதிகம். மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 4.07 சதவீதம் அதிகம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முதலிடம்: மாவட்ட அளவிலான தேர்ச்சியில் திருப்பூர் (97.45%) முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை (97.42%),ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் திருவண்ணாமலை (90.47%) உள்ளது. தலைநகர் சென்னையில் தேர்ச்சி 87.03% ஆகும். அரசுப் பள்ளிகள் பிரிவிலும் திருப்பூர் மாவட்டம் (95.75%) முதல் இடமும், அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%) அடுத்த 2 இடங்களையும் பிடித்துள்ளன. திருவள்ளூர் (84.70%) மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
மொத்தம் 7,532 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 397 அரசுப் பள்ளிகள் உட்பட 2,478 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,767 ஆக இருந்தது.
மாற்றுத் திறன் மாணவர்கள் 5,603 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 5,161 பேர் (92.11%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2.91 சதவீதம் அதிகம். 125 கைதிகள் தேர்வு எழுதியதில் 115 பேர் (92%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018 (91.10%), 2019 (91.30%), 2020 (92.34%), 2021 (100%), 2022 (93.76%), 2023 (94.03%) என்று இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 94.56% என அதிகரித்துள்ளது.