நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு. உடன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 
கல்வி

எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து இயங்கினால் வெற்றியை வசப்படுத்தலாம்: வெ.இறையன்பு, எஸ்.ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து இயங்கினால் வெற்றி வசமாகும் என்று தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அறிவுறுத்தினர்.

சில மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளர்ந்துபோவதுடன், தவறான பழக்கங்களுக்கு உள்ளாகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு தெளிவையும், மன உறுதியையும் உண்டாக்கும் நோக்கில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை – வாழப் பிறந்தவர் நாம்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக சியுஐசி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: வாழ்வில் நாம் பெறும் வெற்றி, பிறருக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும். எனவே, வெற்றி பெற அர்ப்பணிப்புடன் முயற்சிக்க வேண்டும். தற்போது பெரும்பாலான மாணவர்களுக்கு உள்ள சிக்கல், ஆங்கிலம் மீதானபயம். ஆங்கிலம் பேசத் தெரியாததை குறையாக கருதி, தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவிக்கின்றனர். வாழ்வில் சாதனைபுரிய மொழி தடையே இல்லை. நேரம் ஒதுக்கி, முழு கவனத்துடன் முயற்சித்தால் 4 வாரங்களில் ஆங்கில மொழியைக் கற்கலாம்.

அதேபோல, பெற்றோர் தங்களின் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. அவர்களின் திறன்களைக் கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையேல் குழந்தைகள் உங்களை வெறுக்கத் தொடங்குவார்கள். விருப்பமான துறையைத் தேர்வு செய்ய குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். நட்புறவுடன் பழகி, அவர்களின் எண்ணங்களை அறிந்து வழிநடத்த வேண்டும். தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வில் வெற்றிபெற சில விஷயங்கள் தடையாக உள்ளன. அதில் முதலாவது கவனச் சிதறல். எந்த விஷயத்தையும் ஆழமாக அறிந்துகொள்ள முற்படுவதில்லை.

மற்றொன்று சோம்பல் குணம்.இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. உடல், மன ஆரோக்கியம் உறுதியாக இல்லாவிட்டால், நாம் விரும்பும் வெற்றியைப் பெற இயலாது. அதேபோல, நிறைய பயணங்களை மேற்கொண்டு, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள். நீங்கள் வெற்றி பெற, அமைதியாக இருப்பது, விடாமுயற்சியுடன் போராடுவது, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது ஆகிய 3 விஷயங்கள் அவசியமாகும். இவற்றைப் பின்பற்றினால் வாழ்வில் சாதனைபுரியலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை.யில் நேற்று நடைபெற்ற விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை –
வாழப் பிறந்தவ ர் நாம்’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசியதாவது: தற்போதைய சூழலில், வெற்றி பெற்றால் மட்டுமேவாழ முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், தோல்வியடையும் மாணவர்கள், அதை எதிர்கொள்ளமுடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அதேநேரம், வெற்றியைவிட நமக்கான வாழ்க்கை மிகவும் முக்கியமானது. கல்வி என்பது மதிப்பெண் பெறுவதை மட்டுமின்றி,தோல்வியை அணுகுவதையும் கற்றுத்தர வேண்டும். தோல்வி அடையும் மாணவர்கள் சிலர் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

இளைஞர்கள், மாணவர்களுக்கு உணர்ச்சி மேலாண்மைஅவசியம். சிறிய தோல்விகளுக்குக்கூட துவண்டுவிடுகிறார்கள். தோல்வி என்பது முடிவல்ல, அது வெற்றிக்கான அனுபவம் என்பதை உணர வேண்டும். பெற்றோர் திட்டினால், அதிக மதிப்பெண் பெறாவிட்டால்கூட தற்கொலை போன்ற மோசமான முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது. மேலும், தவறான பழக்கங்களில் விழுந்துவிட்டால், உடலும், மனமும் பாதிக்கப்படும். அதேபோல, எதிலும்ஆர்வமின்றி, விரக்தி மனப்பான்மையுடன் இருந்தால், அவை சிறிய பாதிப்பையும் பெரிதாக்கிவிடும்.

இதுதவிர, பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்கள் தோல்விபெறும் நேரத்தில், அதிக அரவணைப்புடன் இருக்க வேண்டும். ஒரு தேர்வு மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. தேர்வில் அல்லது வாழ்வில் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், மாணவர்கள் சோர்வடையத் தேவையில்லை. விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணம் ஆகியவற்றைக் கைவிட வேண்டும். எப்போதும் மனதை உற்சாகத்துடன் வைத்திருங்கள்.

வாழ்வில் ஒரு நோக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு பல்வேறு இலக்குகளை நிர்ணயித்து, செயலாற்ற வேண்டும். அதற்காக தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், நேர மேலாண்மை, தகவல் பரிமாற்றத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து இயங்கினால், வெற்றியை வசமாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவாக, நிகழ்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் லோய்கா நிறுவனம் சார்பில் இனிப்புகளும், டாம்ஸ் நிறுவனம் சார்பில் பேனாக்களும் வழங்கப்பட்டன.

விழாவில், விஐடி சென்னை கூடுதல் பதிவாளர் டாக்டர் பி.கே.மனோகரன், ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி இயக்குநர் டாக்டர்கே.கதிரவன், சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் ஜி.நாகப்பன், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் முதல்வர் டாக்டர் பி.செளமியா, ‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி ஷங்கர் வி.சுப்பிரமணியன், அண்ணா பல்கலைக்கழக சியுஐசி இயக்குநர் சிபு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

SCROLL FOR NEXT