சென்னை: விரும்பும் வரையில் பணிபுரிய சட்டத் துறையில் மட்டுமே வாய்ப்புஉள்ளதாக விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில், துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.
கடந்த மே 1-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி நான்காவது தொடர் நிகழ்வில் ‘சட்டப் படிப்புகள் மற்றும்வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் பேசியதாவது:
விஐடி ஸ்கூல் ஆஃப் லா உதவிபேராசிரியர் பி.சி.அபிராமி: வேறு எந்த மூன்று ஆண்டுகால பட்டப் படிப்புகள் தராத உடனடி வேலைவாய்ப்பையும், சமூக நீதிக்காக நீதிமன்றத்தில் போராடும் உரிமையையும் இந்த 5 ஆண்டுகால சட்டப் படிப்பு வழங்கும். அதேபோல, பணி ஓய்வு என்பதே இல்லாமல், நாம் விரும்பும் வரை பணி செய்யக் கூடிய வாய்ப்பும் சட்டத் துறையில் கிடைக்கும். பிளஸ்-2 படிப்பில் எந்த குரூப் எடுத்திருந்தாலும், சமுதாயத்தின் மேல் அக்கறை இருந்தால் சட்டப் படிப்பை படிக்கலாம்.
வழக்கறிஞர் ஏபிஜெஎம்எஸ் நாகூர் ரோஜா: சட்டப் படிப்பை படித்து முடித்ததும், அந்தந்த மாநிலத்தில் உள்ள பார் கவுன்சிலில் விண்ணப்பித்து, அவர்கள் கேட்கும் விவரங்களைச் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.
2012-ம் ஆண்டுக்குப் பிறகுஅகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே, நீதிமன்றத்தில் வாதாடமுடியும். அந்த தேர்வில் தேர்ச்சிபெற்ற பிறகு, சர்ட்டிபிகேட் ஆஃப் ப்ராக்டீஸ் கொடுப்பார்கள். அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்குகளை முன்வைத்து வாதாடலாம்.
நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: நம் நாட்டில் உள்ள140 கோடி மக்களுக்கும் சட்ட நடைமுறைகள் தெரியாத நிலையில், வழக்கறிஞர்களின் தேவை அதிகம்உள்ளது. மக்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் சட்ட ஆலோசனைகள் வழங்குவது, நீதிமன்றங்களில் அவர்களுக்கான நியாயத்தை வாதாடிப் பெற்றுத் தருவது எனமுக்கியமான பணி வழக்கறிஞர்களுக்கு உரியது. மாணவர்கள் வல்லமைமிக்க நீதித் துறையில் படித்து, வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம்.
நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளித்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE04 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, நிகழ்வைப் பார்த்துப் பயனடையலாம்.