சென்னை: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு உயர்தர கல்விப் பயிற்சி அளிக்கும் வகையில் ஸ்ரீ காஞ்சி மஹா சுவாமிகள் சிவில் சர்வீசஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரிலிருக்கும் பி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ காஞ்சி மஹா சுவாமிகள் சிவில் சர்வீசஸ் அகாடமி தொடங்கப்பட்டது. இது குறித்து பி.எஸ்.குழுமத்தின் பொருளாளர் பிரபாகர் கூறியதாவது:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பரிபூரண ஆசிகளுடன் ஸ்ரீ காஞ்சி மஹா சுவாமிகள் சிவில் சர்வீசஸ் அகாடமி என்கிற பயிற்சி மையம் எங்கள் பி.எஸ். கல்வி மையத்தின் ஒரு தனித்துவ அங்கமாக நிறுவப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா பூஜையுடன் ஏப். 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தப் பயிற்சி மையத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு உயர்தர கல்விப் பயிற்சி மிகவும் நியாயமான கட்டணத்தில் அளிக்கப்பட உள்ளது.
"யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகமாணவர்கள் அதிகமான அளவில்பங்கு பெற்று, இந்திய நாட்டுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், லாப நோக்கம் இல்லாமல் இந்த மையம் நடத்தப்பட உள்ளது" என்று காஞ்சி மடத்துக்கு நெருக்கமான ராமச்சந்திரன் ஐஏஎஸ் (ஓய்வு) தெரிவித்தார்.
விழாவில் முன்னாள் தலைமை செயலர் ஸ்ரீபதி ஐஏஎஸ் (ஓய்வு), கோபாலகிருஷ்ணன், ஐபிஎஸ் (ஓய்வு), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ் ஐபிஎஸ் (ஓய்வு) ஆகியோர் பங்கேற்றனர்.