சென்னை: நீட் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 128 மையங்களில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 5-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளை தயார்ப்படுத்துவதற்கு ஏதுவாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடந்து வந்தன. பின்னர் பொதுத் தேர்வையொட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், பொதுத் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு நீட் தேர்வை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 10,832 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 128 மையங்களில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 10 மையங்களில் 929 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயிற்சிக்கு தேவையான கூடுதல் குறிப்புகளை தயாரித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்குகின்றனர். இயற்பியல், வேதியியல் வினாக்கள் கடினமாக இருப்பதால், உயிரியல் பாடங்களுக்கு மாலையில் கூடுதல் நேரமும் எடுத்து ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.