கோப்புப் படம் 
கல்வி

சிவில் சர்வீஸ் தேர்வு: தொடர்ந்து சரியும் தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம்

ஆர்.ஆதித்தன்

கோவை: நடப்பாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 50-க்கும் குறைவாகவே தமிழகமாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஐஏஎஸ்தேர்வில் தமிழக மாணவர்களின்தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2016 முதல் தமிழகத்தில் ஐஏஎஸ் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தேர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தரும், யுபிஎஸ்சி தேர்வுக் குழு முன்னாள் உறுப்பினருமான இ.பாலகுருசாமி கூறியதாவது:

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 100 முதல் 200 இடங்களில் வெற்றிபெற்றால்தான் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் ஆகிய பதவிகளைப் பெற முடியும். மாணவர்கள் பாடங்களை ஆழ்ந்து, புரிந்து படிக்க வேண்டும்.

கடின உழைப்பு, முறையானத் திட்டமிடல், நேர மேலாண்மை ஆகிய 3 அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். தமிழக மாணவர்கள் ஆங்கில தகவல் தொடர்பில் பின்தங்கி உள்ளனர். ஆங்கிலத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.பாடங்களை பகுப்பாய்வு செய்து பார்க்கும் சிந்தனை, அறிவுபூர்வமான சிந்தனை ஆகிய திறன்களைமேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ்-ஆக வேண்டும் என்று திட்டமிட்டு, அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும். இளநிலை, முதுநிலை வகுப்புப் பாடங்களைப் புரிந்து, கவனமாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.

தமிழகத்திலிருந்து 10 சதவீத அளவுக்கு, அதாவது 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இலக்கை அடையபள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்கள் தயாரானால் மட்டுமே, அது சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் வைஷ்ணவி மற்றும் கல்விபுல தலைவர் சந்துரு ஆகியோர் கூறும்போது, "தமிழக மாணவர் புவனேஷ்ராம் 41-வது ரேங்க் பெற்று, மாநிலஅளவில் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பாண்டில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் நன்றாகஉள்ளது. சிசாட் தேர்வு மிகவும்கடினமாக உள்ளதால், மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். 100 பேர் வரை தேர்ச்சி பெற்று வந்த நிலையை மீட்டெடுக்க, பொதுப்பாடம், கட்டுரை எழுதுதல் மற்றும் ஆங்கிலத் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்” என்றனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் கனகராஜ் கூறும்போது, “தமிழகத்தில் இருந்து 2000-2015வரையிலான காலங்களில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சிசாட் தேர்வுகடந்த 3 ஆண்டுகளாக கடுமையானதாகிவிட்டது.

மேலும், எம்பிபிஎஸ், ஐடி உள்ளிட்ட துறைகளுக்குச் செல்வதிலும், வெளிநாடு சென்று வேலைபார்ப்பதிலும் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங்கள் கற்பிக்கும் முறையை, டெல்லியில் இருப்பதுபோல மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நேர்காணலில் தன்னம்பிக்கையுடன் பேச வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT