சென்னை: விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
தடகளம், குத்துச் சண்டை, இறகு பந்து, டென்னிஸ், சைக்கிளிங், கூடைப் பந்து, கால்பந்து, கிரிக்கெட், நீச்சல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பளு தூக்குதல், கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in இணையதள முகவரிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை தகுதியுள்ள மாணவர்கள் பதிவிறக்கம் செய்து சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு மே.5-ம் தேதிக்குள்ளும், முதன்மை நிலை விளையாட்டு மையத்துக்கு மே.6-ம் தேதிக்குள்ளும், விளையாட்டு விடுதிக்கு மே.8-ம் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். கூடுதல் விவரங்களை ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் செல்போன் எண்ணில் ( 9514000777 ) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.