தூத்துக்குடி: யுபிஎஸ்சி தேர்வில் தூத்துக்குடியை சேர்ந்த பெண் மருத்துவர் அகில இந்திய அளவில் 143-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்தவர் எஸ்.நித்திலா பிரியந்தி. இவர் இந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 143-வது இடத்தையும், தமிழக அளவில் 6-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து நித்திலா பிரியந்தி கூறியதாவது: தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்து விட்டு எம்பிபிஎஸ் படித்து, மருத்துவரானேன். யுபிஎஸ்சி தேர்வு எழுத முடிவு செய்தேன். அதற்காக தீவிரமாக பயிற்சி பெற்றேன். முதல்முறை குறைந்த மதிப்பெண்ணில் தவற விட்டேன். 2-வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு தந்தை சுபாஷ் சந்திர போஸ், தாய் திலகா மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.
ஐநா சபை உள்ளிட்டவற்றில், இந்தியாவின் முடிவை உலக நாடுகளுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை வெளியுறவுத்துறை தான் செய்கிறது. இதனால் நான் வெளியுறவுத்துறை பணியை முதல் விருப்பமாக கொடுத்துள்ளேன். 2-வது விருப்பமாக ஐஏஎஸ் பணியை தேர்வு செய்துள்ளேன்.நான் ஐஏஎஸ் ஆனால், நலத்திட்டங்கள் விரைவாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். சாதனை படைத்த எஸ்.நித்திலா பிரியந்திக்கு தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.