திண்டுக்கல்: விடா முயற்சியும், இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியை தேடித் தந்தது என்று யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 83-வது இடம் பெற்ற சுபதர்ஷிணி தெரிவித்தார்.
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பல் மருத்துவரான சுபதர்ஷிணி ( 30 ), திண்டுக்கல் நகர் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஆசிக் ஹூசைன் ( 25 ) ஆகியோர் 2023-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இரு வரும் நேற்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
எம்.சுபதர்ஷிணி கூறியதாவது: பல் மருத்துவம் படித்த பின்பு 2017-ம் ஆண்டு டெல்லியில் ஓராண்டு யுபிஎஸ்சி தேர்வுக்குப் படித்தேன். அதன் பின்பு திண்டுக்கல் வந்து வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாரானேன். 6 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தேன். ஒவ்வொரு முறையும் தோல்வியிலிருந்து பாடம் கற்றேன். 7-வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். தேசிய அளவில் 83-வது இடம் பெற்றுள்ளேன்.
தொடர்ந்து படித்தது, விடாமல் முயற்சி செய்ததுதான் எனது வெற்றிக்கு காரணம். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது எனது ஒரே இலக்காக இருந்தது. தொடர் முயற்சி காரணமாக சாதித்துள்ளேன். விடாமுயற்சியும், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் தேர்வில் வெற்றிபெறுவது உறுதி என்று கூறினார்.
திண்டுக்கல் மாசிலாமணி புரத்தைச் சேர்ந்த ஜெ.ஆசிக் ஹூசைன் கூறியதாவது: சிவில் இன்ஜினீயரிங் முடித்துள்ளேன். யுபிஎஸ்சி தேர்வுக்காக 2020-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு படித்தேன். அதன் பின்பு கரோனா காரணமாக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்றேன். முதல் முயற்சியில் முதன்மை தேர்வில் தோல்வியடைந்தேன். இரண்டாம் முயற்சியிலும் தோல்வி யடைந்தேன்.
தொடர்ந்து முயற்சித்து மூன்றாவது முறையாக அனைத்திலும் வெற்றி பெற்றேன். தேசிய அளவில் 845-வது இடம் பெற்றுள்ளேன். யுபிஎஸ்சி தேர்வுக்கு படிப்பதற்கு இணையதளத்திலேயே நிறைய வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்தி வீட்டிலிருந்து படித்தே வெற்றி பெறலாம். எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.