விஸ்வபாரதி நடுநிலைப் பள்ளியின் 80-ம் ஆண்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெரிய கருப்பையாவுக்கு பள்ளியின் தாளாளர் கே.பி.சந்திரசேகரன் நினைவுப்பரிசு வழங்கினார். உடன் சென்னை விஐடி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி டீன் ரபிராஜ், கற்பகம் உயர் கல்வி அகாடமி ஜோதிடவியல் துறை தலைவர் கே.பி.வித்யாதரன் மற்றும் வாணி பெரிய கருப்பையா. படம்: எஸ்.சத்தியசீலன் 
கல்வி

கவனச் சிதறலை ஏற்படுத்தும் டிவியிலும், ஸ்மார்ட் போனிலும் லயித்துவிடாதீர்கள்: பள்ளி மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூளை விஸ்வபாரதி நடுநிலைப் பள்ளியின் 80-வது ஆண்டுவிழா நேரு விளையாட்ட ரங்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் கே.பி. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.பெரியகருப்பையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: சென்னை மாநகரில் பல்வேறு கான்வென்ட் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மத்தியில் மாணவர்களுக்கு தமிழ்வழி கல்வியை விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளி வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

மாணவர்கள் எப்போதும் உயர்வாக சிந்திக்க வேண்டும். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் நாம் எண்ணுவதை அடையமுடியும். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் நீதிபதிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக வர வாழ்த்துகிறேன். மாணவர்கள் டிவி பார்ப்பதிலும், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதிலும் லயித்துவிடாதீர்கள்.

அவை கவனச்சிதறலை ஏற்படுத்தும். பேசுவதற்கும் படிப்புக்கும் செல்போனை பயன்படுத்தலாம் என்று நீதிபதி கூறினார். ஜோதிட நிபுணரும், கற்பகம் உயர்கல்வி அகாடமியின் ஜோதிடவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் கே.பி.வித்யாதரன் பேசும்போது, ``கல்விதான் நம்மைமேம்படுத்தும். பணத்தை கொடுத்தால் குறையும். ஆனால் கல்வியை கொடுத்தால் அது வளரும். மாணவர்கள் எதையும் ஆழமாக படிக்க வேண்டும்'' என்றார்.

விஐடி பல்கலைக்கழக சட்டக் கல்லூரி டீன் சி.ரபிராஜ், ஸ்ரீஹரி கோட்டா இஸ்ரோ விஞ்ஞானி டி.ரமணீஸ்வரி, வழக்கறிஞர் எஸ்.பத்மா, பள்ளிக்கல்வித் துறை முதுநிலை ஆசிரியர் பயிற்றுநர் சி.முருகன் ஆகியோரும் பேசினர். முன்னதாக, பள்ளி தாளாளரின் மகளும், விஐடி பல்கலைக்கழக சட்டக்கல்லூரி உதவி பேராசிரியையுமான அபிராமி வரவேற்றார். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை பியூலா நிர்மலா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT