வேலூர் விஐடி பல்கலைக்கழக ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், சிறந்த மாணவர்களுக்கான விருதுகள், கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களுடன் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சித்தராம் மற்றும் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன் 
கல்வி

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 500 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி சாதனை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைவர் பெருமிதம்

செய்திப்பிரிவு

வேலூர்: இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூலம் 500 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டியது மிகப் பெரிய சாதனை என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைவர் (ஏஐசிடிஇ) டி.ஜி.சித்தராம் கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சித்தராம் பேசியதாவது:

ஆராய்ச்சி, கல்வி, கண்டுபிடிப்புகள், அதற்கான காப்புரிமை பெறுவதில் உலக அளவில் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 2023-ல் மட்டும் 80 ஆயிரம் கண்டுபிடிப்புகள் காப்புரிமை கோரியுள்ளன. 2010-ல் இந்த அளவுக்கு இல்லை. தற்போதுதான் அதிக கண்டுபிடிப்புகள் வருகின்றன.

அதேபோல், இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குவது 2016-ல் 300-ஆக இருந்த நிலையில் 2023-ல் 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் 500 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனைஆகும். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

கரோனா காலத்தில் இந்தியாவில் 300 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தான் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் ஏஐசிடிஇ ஆண்டுக்கு ரூ.300 கோடி அளவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இவற்றை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதிலும், இலவசக் கல்வி அளிப்பதிலும் விஐடி பல்கலைக்கழகம் தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. ரூ.47 லட்சம் கோடியிலான மத்திய பட்ஜெட்டில், ரூ.1 லட்சம் கோடி மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு வருவாயில் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால், உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா155-வது இடத்துக்கு பின்தங்கிஉள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனங்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமைகளை குறைக்க வேண்டும். எளிய முறையில் உரிமங்கள் பெற வழிவகுக்க வேண்டும். இவற்றின் மூலம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த முடியும்’’ என்றார்.

விழாவில், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன்,ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT