ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தொடர்ந்து கேலி செய்வதாகப் புகார் எழுந்தது.
இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆண்டிபட்டி டிஎஸ்பி ராமலிங்கம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதைத் தொடர்ந்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.