சென்னை: சென்னையில் நடைபெறும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை தொடர்பான பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சிமையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் உட்பட பலரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) கார வகை உணவு பொருட்களை தயாரிப்பது குறித்தும், 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மண்புழு உரம் தயார் செய்வது பற்றியும் செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்படி, கார வகை உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் சாம்பார் பொடி, ரசம் பொடி, இட்லி பொடி, கரம் மசாலா, கறிவேப்பிலை பொடி, நல்லெண்ணெய் பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, மீன் மசாலா போன்ற காரமான பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும்.
இல்லத்தரசிகள்: மண்புழு உரம் தயாரிக்கும் முறை தொடர்பான பயிற்சியில் மண்புழுக்களின் வகைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறை, மண்புழுக்களுக்கு ஏற்ற தீவனம், மண்புழு வளர்ப்பு, அதற்கான கட்டமைப்பை உருவாக்குதல், சிறிய பரப்பளவில் மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்.
இந்த பயிற்சிகளை இல்லத்தரசிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.