கணிதமேதை என போற்றப்படும் ராமானுஜன் ஈரோட்டில் 1887 டிச., 22-ம் தேதி பிறந்தார். பிறந்து 3 ஆண்டுகள் அரை பேச்சுத்திறன் இல்லாதிருந்தவர். பள்ளியில் கணித பாடத் தேர்வுகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்கு பாதி நேரத்திலேயே முடித்து முழு மதிப்பெண் பெற்றார்.
முடிவுறா எண்களின் வரிசை மீது அளவற்ற ஆர்வம் இருந்ததால் அவற்றிலேயே மூழ்கி போனார். பதினாறு வயதில் நண்பர்கள் மூலம் வாசிக்க கிடைத்த ஜி.எஸ். கார் (G.S.Carr) எழுதிய Synopsis of elementary results in pure and applied Mathematics அவரது வாழ்வின் திருப்புமுனையாக மாறியது.
மூன்று வாழை பழங்களை மூன்று பேருக்கு ஆளுக்கு ஒரு பழமாக கொடுக்கலாம். ஆனால் பூஜ்ஜியம் வாழைப்பழங்களை பூஜ்ஜியம் நபர்களுக்கு எப்படி பிரித்துக் கொடுப்பது? என நான்காம் வகுப்பு படிக்கும் போதே கேள்வி கேட்ட ராமானுஜன் 17-வது வயதில் பெர்னாலி எண்கள் மீதான புதிய மதிப்பீடுகள் எனும் வரிசையை வெளியிட்டார். அதே வருடமே யூலர் மாறிலியின் மதிப்பை 15 தசம ஸ்தானம் வரை கணக்கிட்டு அடுத்த சாதனை படைத்தார்.
ராமானுஜன் எண்கள்: 10-ம் வகுப்பு படிக்கும்போதே உலக கணிதவியல் நிபுணர்களால் கூட நினைத்து பார்க்க முடியாத 100 தேற்றங்கள் கொண்ட தனது முதல் நோட்டுப் புத்தகத்தை முடித்துவிட்டார். அல்ஜிப்ரா, திரிகோண விதி, எண் கோட்பாட்டியல் போன்றவற்றில் அளவற்ற மேதமையுடன் திகழ்ந்தார்.
1904-ல் கே.ரங்கநாத ராவ் கணித பரிசை பெற்றார். கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரியில் படித்தபோது கணித பாடத்தை தவிர அவரால் வேறு எந்த பாடத்திலும் கவனத்தை செலுத்த முடியவில்லை.
இந்திய கணிதவியல் நிறுவன ஆய்வு இதழில் தனது முதல் கணித ஆய்வு கட்டுரை வெளியிட்டார். 17 பக்கங்கள் கொண்ட பெருனாலி வரிசை குறித்த ஆய்வுக்கட்டுரை 17 ஆய்வு கட்டுரைகளுக்கு சமமானதாகும். 1913 ஜனவரி 16-ம் தேதி ஒரு கடிதத்தை கணித பேராசிரியர் ஜி.எச்.ஹார்டிக்கு ராமானுஜன் எழுதினார். அத்தோடு ஒன்பது பக்க கணித அதிசயத்தையும் அனுப்பி இருந்தார்.
ஹார்டி அவநம்பிக்கையுடன் அவரது கணிதத் தேற்றத்தை படிக்க தொடங்கினார். முடிவில் புதிய கணித தேற்றங்களில் அதிர்ந்து போய் “இது மாதிரி நான் இதுவரை பார்த்தது இல்லை” என அதிசயித்தார்.
ராமானுஜன் 1914-ல் இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஹார்டி, லிட்டில் உட் இருவருடன் இணைந்தும், தனியாகவும் 27 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். P(n)-ஐ ராமானுஜன் முடிவுறா எண் வரிசை ஆக்கிய போது எண் கோட்பாட்டின் முக்கியமான மைல்கல் ஆனது. கணித ராயல் சொசைட்டி உறுப்பினர் ஆனார். 1919-ல் உடல்நலம் மோசமானது.
அப்போது கூட கார் பதிவு எண் 1729-ஐ வைத்து 1729= 10-ன் அடுக்கு 3 + 9-ன் அடுக்கு 3 = 9-ன் அடுக்கு 3 + 10-ன் அடுக்கு 3 என்ற சமன்பாடு உருவாக்கி நண்பர் ஹார்டியை ஆச்சரியப்படுத்தினார். இப்படி மூன்றாம் மடங்கின் கூட்டுத் தொகையாக விளக்க முடிந்த அனைத்து எண்களுமே இப்போது “ராமானுஜன் எண்கள்” என்றழைக்கப்படுகிறது.
- கல்வியாளர், எழுத்தாளர்