சென்னை: தேசிய அளவில் கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை இயக்குநர் ராகவேந்திர பட்டா தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலை. வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் 113 பிஎச்டி உட்பட இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்த 1,166 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 253 பேருக்கு விருதுகளும் அளிக்கப்பட்டன. அதிகபட்சமாக மாணவர் வி.விஷ்ணு 13, மாணவர் என்.பிரதீப் 9 விருதுகளை பெற்றனர். இதுதவிர சிறப்பாக பணியாற்றிய 12 பேராசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர் நலனுக்காக பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் நன்கொடை விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்தவகையில் 8 விருதுகள் அளிக்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் துணை தலைமை இயக்குநர் (கால்நடை அறிவியல்) ராகவேந்திர பட்டா கூறியதாவது: உலகில் கடந்த 10 ஆண்டுகளில் கால்நடைத் துறை அதிகளவில் லாபத்தை அடைந்துள்ளது.
மொத்த உணவு ஆற்றல் தேவையில் 15 சதவீதம், உணவுப் புரதத்தில் 25 சதவீதம் பங்களிப்பை இந்த துறை வழங்குகிறது. காலநிலை மாற்றத்தால் வரும் அச்சுறுத்தல் நமது கால்நடை உற்பத்தி முறையின் நிலைத்தன்மையை பாதிக்கிறது. எனவே அரசுகளும் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்த சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
இந்தியாவில் கால்நடைத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. மாநில, மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் பண்ணைகள், கால்நடை மருத்துவமனைகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தி பிரிவுகள், குதிரை மற்றும் கால்நடையை கொண்ட ராணுவப் படைப்பிரிவு, கால்நடை உற்பத்தி பொருள் தொழிற் நிறுவனங்கள், தேசிய வங்கிகள் போன்ற பல்வேறு துறைகளில் கால்நடை மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது. எனவே, இந்த துறையில் சிறந்த வளர்ச்சியை நீங்கள் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார், பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அழைப்பிதழில்கூட அவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் விழாவை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனும், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.