சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஸ்டெம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில், சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 
கல்வி

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இந்திய அறக்கட்டளையின் ‘தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் திறனை மேம்படுத்தும் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ‘ஸ்டெம்’ புதிய கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் முதல் ஆண்டு நிறைவு விழா அப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: இந்த விழாவை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் முன்னின்று நடத்துவதே மிகப்பெரிய வெற்றி. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அதுவும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும். ஆனால், தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது.

நான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத்தான் மாணவர்களுக்கு மீண்டும் சொல்கிறேன். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான் என்னால் உயர முடிந்தது.

மாணவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் உங்களுக்கான உயரம் எங்கேயோ காத்துக் கொண்டிருக்கும். நான் உயர்வதற்கு காரணம் எனக்கு கிடைத்த கல்வி. அந்த கல்வி மக்களின் வரிப்பணத்தில்தான் எனக்கு கிடைத்தது. எனவே, அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க இந்திய அறக்கட்டளையின் கற்பித்தல் - கற்றல் திட்டத்தின் தலைவர் டி.பாஸ்கரன் பேசும்போது, ``21-ம் நூற்றாண்டு வேலைவாய்ப்புக்கு குழுவோடு பணியாற்றுதல், படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட திறமைகள் அடிப்படை கூறுகளாகக் கருதப்படுகின்றன. இதற்கு தயார்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். ‘ஸ்டெம்’ மையத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் பேசும்போது, ``திறமைகளை வெளிப்படுத்த அருமையான தளத்தை ஏற்படுத்தி கொடுத்தால் அரசு பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும். வகுப்பறை என்பது வெறுமனே பாடம் நடத்தப்படும் இடமாக மட்டும் இல்லாமல் செய்முறை பயிற்சி சார்ந்ததாகவும் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், அண்ணா பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் கவிஞர் தமிழ்இயலன் ஆகியோரும் பேசினர். முன்னதாக விழாவையொட்டி நடத்தப்பட்ட மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டு அனைவரையும் பாராட்டினார்.

SCROLL FOR NEXT