சென்னை: பி.ஆர்க் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் ஆர்.முத்து தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்தியஉயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சிபெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.
இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஜன.24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 55,608 பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியானது.
இத்தேர்வில் தமிழக மாணவர்ஆர்.முத்து (பி.ஆர்க்), ஆந்திராவைச் சேர்ந்த கோலாசானி சாகேத் பிரணவ் (பி.பிளானிங்) ஆகியோர் முழு மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்.4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.