சென்னை: செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐஓடி தொழில்நுட்பம் பற்றிய 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில்இருந்து தகவல் தொழில்நுட்பநிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் `உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐஓடி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி போக்குகள்' என்ற தலைப்பிலான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்து பேசியதாவது:
செலவினம் குறைகிறது: கடந்த 40 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் தொழில்நுட்பம் தொழில்துறையில் குறிப்பாக மின்சாரத் துறையில் பெருமளவு பயன்படுகிறது. இதனால் செலவினங்கள் குறைகின்றன. சாதாரணமாக வீடுகளில் கூட ஐஓடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.
ஏஐ தொழில்நுட்பத்தை பற்றியாரும் கவலைப்பட தேவையில்லை. மனிதர்களும் ஏஐ தொழில்நுட்பமும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அறிவுசார் பொருளாதாரம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, ``கடந்த 3 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப பயன்பாடுவர்த்தகத் துறைகளில் அதிகரித்திருக்கிறது.
நாம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோராக மட்டுமில்லாமல் அதை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவோராகவும் இருக்க வேண்டும். வரும் காலத்தில் தொழில்தொடங்க அறிவாற்றல்தான் தேவைப்படும். காரணம் வரும் காலம் அறிவுசார் பொருளாதாரம் சார்ந்ததாகத்தான் இருக்கும்'' என்றார்.
முன்னதாக, ஆராய்ச்சி மைய இயக்குநர் சி.உமாராணி வரவேற்றார். நிறைவாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் நன்றி கூறினார். இந்த 3 நாள் கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.