கல்வி

சென்னை விஐடியில் சர்வதேச கலை, விளையாட்டு விழா: இன்று முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விஐடி-யில் இன்று சர்வதேச கலை, விளையாட்டு விழா தொடங்குகிறது. இவ்விழாவில் 250 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்சேகர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள விஐடி பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழா (வைப்ரன்ஸ்-2024) இன்றுமுதல் (மார்ச் 6) 9-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் கோலா கலமாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஜப்பான், பிரேசில், இந்தோனேசியா, இலங்கை, போலந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மாணவர்கள் என ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

இதில் 200 வகையான கலைப் போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 விளையாட்டுப் போட்டிகள் உட்பட 250 போட்டிகள் இடம்பெறுகின்றன.

போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் நாள் விழாவில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார். அன்றைய தினம் ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

2-வது நாள் விழாவில் பாடகிஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும், 3-வது நாள் விழாவில் பாடகிஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சியும், புகழ்பெற்ற ஷேரே கண்ணா குழுவின் நடனமும் நடைபெறும். நிறைவு நாள் விழாவில் நடிகர் சோனு சூத், டிஜே-க்கள் (டிஸ்க்ஜாக்கி) தனிகா, லாஸ்ட் ஸ்டோரிஸ்கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்வாறு சேகர் கூறினார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி வாய்ப்புகள், வளாக நேர்முகத் தேர்வுகள், அதற்கு தயார்படுத்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் குறித்து கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் எடுத்துரைத்தார்.

இயக்குநர் (மாணவர் நலன்) ராஜசேகர் கூறும்போது, ``வெறும் கேளிக்கை நிகழ்ச்சியாக இல்லாமல் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை அளிக்கும் நிகழ்வாகவே இந்த கலைவிழா நடத்தப்படுகிறது.

இதன்மூலம் மாணவர்களின் தனித்திறன்கள் மேம்படும். பின்னாளில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில்முனைவோர் ஆவதற்கும் இந்த விழா அனுபவங்கள் அவர்களுக்குப் பேருதவியாக இருக் கும்'' என்றார். இந்த விழாவின் ஒருங்கிணைப் பாளர்களாக பணியாற்றும் மாணவ,மாணவிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT