சென்னை: உயர்கல்வி மற்றும் கூட்டு ஆராய்ச்சி தொடர்பாக அமெரிக்கா வின் கொலராடோ பல்கலைக் கழகத்துடன் சென்னை ஸ்ரீ ராமச் சந்திரா பல்கலைக்கழகம் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவம் தொடர்பான படிப்புகளிலும், ஆராய்ச்சி பணிகளிலும் இணைந்து செயல்பட சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலராடோ மாநில பல்கலைக்கழகமும் முன் வந்துள்ளன.
இதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திடும் நிகழ்ச்சி போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொலராடோ பல்கலைக்கழக தலைவர் ஆமி பார்சனும், ராமச்சந்திரா பல்கலைக் கழக துணைவேந்தர் உமா சேகரும் ஒப்பந்த ஆவணங்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத் தின்படி, பொறியியல், மருத்துவம், உயிரி-மருத்துவம், பொது சுகாதா ரம், மருத்துவ நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில்இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படும். ராமச் சந்திரா பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்ட காலம் கொலராடோ பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.
இங்குள்ள பேராசிரியர்களும் அங்கு பணியாற்றலாம். அதே போல், கொலராடோ பல்கலைக் கழக மாணவர்கள் குறிப்பிட்ட காலம் ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் படிக்க முடியும். அதன் பேராசிரியர்களும் இங்கு பணி யாற்றுவதுடன் ஆராய்ச்சி பணி யிலும் ஈடுபடலாம்.
மேலும், வரும் காலத்தில் மறுவாழ்வு மருத்துவம், மூட்டு மருத்துவம், உயிரி-பொறியியல், காலநிலை மாற்றம், மரபணு, மூலக் கூறு அறிவியல் உள்ளிட்ட துறை களிலும் இணைந்து செயல்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர் பாக ராமச்சந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் உமா சேகர் கூறும் போது, ``எங்கள் பல்கலைக்கழகத் தில் 4 ஆண்டுக்கால இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் கொலராடோ பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாகப் படிப்பார்கள்.
அதற்கேற்ப அவர்களுக்கு உரிய மதிப் பெண் வழங்கப்படும். இளநிலை படிக்கும் மாணவர்கள் விரும்பி னால் 6 மாதம் முதல் 12 மாதம் வரை கொலராடோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபடலாம். இந்த புதிய திட்டம் மூலம் எங்கள் மாணவர்கள் கொலராடோ பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் எளிதாகச் சேர முடியும்.
இரு பல்கலைக்கழக பேராசிரி யர்களும் ஸ்டெம் செல், இனப் பெருக்க மருத்துவம், பயோ-மெட்டீரியல், காலநிலை மாற்றம், உயிரி பொறியியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளலாம். ஆசிரி யர்-மாணவர் பரிமாற்றம் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்'' என்றார்.
கூட்டுப் படிப்புகள் மற்றும் அவற் றுக்கான பாடத்திட்டம் குறித்து பல்கலைக்கழக டீன் (ஆராய்ச்சி) கல்பனா பாலகிருஷ்ணன் எடுத் துரைத்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்கப் பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார்.