கல்வி

அறந்தாங்கி அருகே குடிநீர் இன்றி பரிதவிக்கும் பள்ளி, அங்கன்வாடி மாணவர்கள்!

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குடிநீர் விநியோகம் இல்லாததால், பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

அறந்தாங்கி அருகேயுள்ள திருநாளூர் வடக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகள் 150 பேர் படித்து வருகின்றனர். மேலும், இவ்வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் சிறுவர்கள் 40 பேர் படித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக இவ்வளாகத்துக்கு குடிநீர் வரவில்லை. இதனால், மாணவ - மாணவிகளுக்கு சத்துணவு சமைப்பது சிரமமாக உள்ளது. கழிப்பிடத்தையும் பயன்படுத்த முடியவில்லை. எனவே, பள்ளிக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மாதர் சங்கத்தினர் கூறியது: திருநாளூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பள்ளிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நீர்தான், பள்ளி மற்றும் அங்கன்வாடியில் சமையல் செய்யவும், குடிநீராகவும், கழிப்பிடத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நீர் வராதாதல் சத்துணவு சமைப்பது பெரும் சிரமமாக உள்ளதுடன், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘மும்முனை மின்சாரம் ஒரு வாரம் காலையிலும், அடுத்த வாரம் மாலையிலும் என சுழற்சி முறையில் பகலில் 6 மணி நேரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாலையில் குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், அந்த நேரத்தில் கேட்வால்வை திறந்து பள்ளி குடிநீர்த் தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஆனால், இதை அங்கு யாரும் செய்வதில்லை. பள்ளிக்கென தனியாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT