சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நேரில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல்22-ம் தேதி வரையிலும், 11-ம்வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும், 10-ம்வகுப்புக்கு மார்ச் 26 முதல் ஏப்.8-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், 12-ம் வகுப்புக்கு பிப்.12 (நேற்று) முதல் பிப்.17-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்புக்கு19 முதல் பிப்.24-ம் தேதி வரையிலும், 10-ம் வகுப்புக்கு 23 முதல் பிப். 29-ம் தேதி வரையிலும் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து செய்முறை தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் 12-ம் வகுப்புமாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சென்னை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 6 மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
பள்ளிகளில் தேர்வை கண்காணிக்க மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பிளஸ் 2மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியதைமுன்னிட்டு, சென்னை மந்தவெளியில் இயங்கிவரும் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தேர்வுக்கான ஆய்வகங்களை பார்வையிட்ட அவர், தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நேரில் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.