சிவகங்கை: சிவகங்கை அருகே மாணவர்களை கவர அரசு பள்ளியை சீரமைத்து ரயில் பெட்டிகள் போன்ற தோற் றத்தில் வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டியுள்ளனர்.
சிவகங்கை அருகே அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 160 மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 3 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடம், 2 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடம் என 3 கட்டிடங்கள் உள்ளன. இந்நிலையில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.16.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. மராமத்து பணி முடிவடைந்த நிலையில், மாணவர்களை கவரும் வகையில் வகுப்பறை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டி வருகின்றனர்.
இதில் 3 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடத்தை சீரமைத்து ரயில் இன்ஜினுடன் கூடிய பெட்டிகள் தோற்றத்தில் வண்ணம் தீட்டினர். மேலும் வகுப்பறைக்குள் தலைவர்களின் படங்கள், பழ மொழிகள், திருக்குறள், மருத்துவப் பயன்கள், பொது அறிவு தகவல்களை எழுதியுள்ளனர். காடு, விலங்குகள் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை ஓவியமாக வரைந்துள்ளனர். மீதியுள்ள 2 கட்டிடங்களில் ஒன்றை பேருந்து தோற்றத்திலும், மற்றொன்றை விமான தோற்றத்திலும் வண்ணம் தீட்ட திட்ட மிட்டுள்ளனர்.
இது குறித்து ஊராட்சித் தலைவர் செல்வராணி கூறுகையில், மாணவர்களை கவரும் வகையில் வகுப்பறையின் தோற்றத்தை மாற்ற முடிவு செய்தோம். ஒன்றிய உதவிப் பொறியாளர் சையது ஆலோசனையின்படி ரயில் பெட்டி கள் வண்ணம் தீட்டப்பட்டது என்று கூறினார்.