கல்வி

74 வயதில் முனைவர் பட்டம் பெற்ற ஓய்வுபெற்ற பயணச்சீட்டு ஆய்வாளர்!

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் 74 வயதான ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து கழக பயணச்சீட்டு ஆய்வாளர் முருகன் முனைவர் பட்டம் பெற்றார். 10-ம் வகுப்பு வரையில் படித்திருந்த அவர் ஓய்வுக்குப்பின் படிப்படியாக படித்து முன்னேறி முன்மாதிரி காட்டியிருக்கிறார்.

பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் முருகன். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி பணிமனையில் நடந்துநராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் பதவி உயர்வு பெற்று பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். 33 ஆண்டுகள் பணியாற்றிய அவர் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றார். அப்போதுவரை 10-ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்திருந்தார்.

ஓய்வுக்குப்பின் பாளையங்கோட்டையிலுள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினரானார். அங்கு மாநில தமிழ்ச் சங்கத்தின் செயலர் பேராசிரியர் பால் வளனரசு வழிகாட்டுதலில் மேற்கொண்டு 12-ம் வகுப்பு, இளங்கலை, முதுகலை தமிழ் பட்டப்படிப்புகளை படித்தார். அதோடு நிற்காமல் தமிழில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டார். சா.வே சுப்பிரமணியனாரின் தமிழ் இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்தார். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்றார்.

தனது 74-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றது குறித்து அவர் கூறியதாவது: “தமிழ் மீது மிகுந்த பற்று காரணமாக பணி ஓய்வுக்குப்பிறகு மாநிலத் தமிழ்ச் சங்க கூட்டங்களில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். அங்குள்ள நிர்வாகிகளின் ஊக்கம் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் தமிழிலில் இளநிலை, முதுநிலை பட்டங்களைப் பெற்றேன். மேற்கொண்டு முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டேன்.

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் செல்லப்பா, பாளைங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் அனுஷியா ஆகியோரின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆய்வில் ஈடுபட்டேன். இதற்காக தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் மதிதா இந்துக் கல்லூரிக்கு சென்று படித்தேன். தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். ஆளுநரிடம் பட்டம் பெற்றது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்” இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT