சென்னை: பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் அறுவை சிகிச்சை அரங்கில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகள், மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி, அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வழங்கி வருகிறது. இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை ஆணையத்தின் முதுநிலை கல்வி வாரிய செயலர் அஜேந்தர் சிங் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தினமும் குறைந்தது 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் குறைந்தது 75 சதவீத படுக்கைகள் நிரம்பியிருக்க வேண்டும். அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்களில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வாரத்துக்கு குறைந்தது 2 நாள் பயிற்சி அளிக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் மருத்துவ பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, இணையதள வசதி இருக்க வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.