திருச்சி: திருச்சி - திண்டுக்கல் சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில், ஜன.6-ம் தேதி மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, பி.ஏ. எல்எல்பி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 2 பேர், சக மாணவர் ஒருவருக்கு சிறுநீர் கலந்த குளிர் பானத்தை ஏமாற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். அதன் பின் இதையறிந்த பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த குழு அமைக்கப் பட்டது. அக்குழுவினர், பல்கலைக் கழகத் துணை வேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் பால கிருஷ்ணன் ஆகியோரிடம் அண்மையில் விசாரணை அறிக்கையை அளித்தனர்.
அதில், ராகிங்கில் ஈடுபட்ட 2 மாணவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பதிவாளர் பால கிருஷ்ணன், 2 மாணவர்கள் மீதும் ராம்ஜி நகர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பல்கலைக்கழக ராகிங் தடுப்புக் குழு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் 2 பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக துணை வேந்தர் தலைமையில் 9 பேர் அடங்கிய ராகிங் தடுப்பு குழுக் கூட்டம் பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், ராகிங்கில் ஈடுபட்ட 2 மாணவர்களும் நிகழ் கல்வியாண்டில் ( 2023 - 2024 ) 10-வது பருவம் படிக்க ஓராண்டுக்கு தடை விதிக்க பல்கலைக் கழக நிர்வாகக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை நிர்வாகக் குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.