பிரான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் 
கல்வி

குழந்தை தொழிலாளர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்கும் பிரான்மலை அரசு பள்ளி!

இ.ஜெகநாதன்

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் பூக்கட்டும் குழந்தைகளை சிறந்த மாணவர்களாக மாற்றி, அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகின்றனர்.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, புறநானூற்றுச் சங்கப் புலவன் கபிலன் போன்றோர் வாழ்ந்த பகுதி தான் பறம்புமலை என்ற பிரான்மலை. இங்கு மலையடி வாரத்தில் 135 ஆண்டு கால அரசு பள்ளி உள்ளது. 1889-ம் ஆண்டு போர்டு உயர்தர ஆரம்ப பாடசாலையாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தலால் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது 170 மாணவர்கள், 6 ஆசிரியர்களுடன் இப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வியோடு கணினி பயிற்சி, ஆங்கிலப் பேச்சு பயிற்சி, நடனம், ஓவியம், உள்ளரங்கு விளையாட்டுப் பயிற்சி ஆகியன மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் பூக்கட்டி சிவகங்கை மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, புதுக் கோட்டை மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் சிறு வயதிலேயே பூ கட்டும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

பிரான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து வந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் கல்வி குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர்களை மாணவர்களாக மாற்றியுள்ளனர்.

தற்போது பள்ளிக்கு வந்து சென்ற பின்பு ஓய்வு நேரங்களில் மட்டுமே குடும்பத்தினருக்கு உறுதுணையாக பூக்கட்டும் தொழிலில் சிறார்கள் ஈடுபடுகின்றனர். பூக்கட்டும் தொழிலாளர்கள் குழந்தைகளை தொழில் முனைவோர்களாகவும், உயர் பதவிகளுக்கு செல்லவும் இப்பள்ளி அடித்தளமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி கூறியதாவது: நான் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதில் பெருமை அடைகிறேன். ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கல்வியோடு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளிப்பதால், இப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு ஆர்வமாக அனுப்புகின்றனர்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 லட்சத்தில் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவி, மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கி வருகிறோம். கடந்த காலங்களில் குழந்தைகள் சிலர் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு காலை உணவு வாங்கி கொடுப்போம். தற்போது அரசின் காலை உணவு திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இப்பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலரின் ஆலோசனை, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, பள்ளி மேலாண்மைக் குழு, கிராம மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT