கல்வி

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7-க்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் பயிற்சியை முடித்து தேர்வில் பங்கேற்கலாம் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளாமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

நாடுமுழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில், 2024-25-ம் கல்வி ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வு ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் கடைசி ஓராண்டு பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். பயிற்சியை நிறைவு செய்யும் அவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதால் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக தங்களுடைய பயிற்சியை நிறைவு செய்பவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு https://natboard.edu.in என்ற இணைதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT