திருச்சியில் உள்ள ஒரு தட்டச்சு பயிலகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள். | படம்: ர.செல்வமுத்துகுமார் | 
கல்வி

புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதால் தட்டச்சு தேர்வில் தடுமாற்றம்; சுருக்கெழுத்து தேர்வில் சுணக்கம்

எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வுகளில் தொடர்ந்து நிலவும் குளறுபடிகளை தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சரிசெய்ய வேண்டும் என வணிகவியல் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ஏறத்தாழ 4,500 தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து, கணினி பயிலகங்கள் உள்ளன. இதில் பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாடு அரசுதொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இருமுறை தேர்வை நடத்துகிறது. ஒவ்வொரு தேர்விலும் ஏறத்தாழ 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில்தேர்ச்சி பெற்ற பலரும் அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எடுத்த சில நடவடிக்கைகள் மாணவர்கள், தட்டச்சு பயிலகங்களுக்கு பெரும் குழப்பத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் தொடர்பாளர் ஜெ.ரவிச்சந்திரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தட்டச்சு பயிலக மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் நிரந்தரமாக ஒரே இடத்தில் தேர்வை நடத்த வேண்டும். ஆனால், தற்போது ஒவ்வொரு தேர்வின்போதும் விண்ணப்பத்தில் தேர்வு மையத்தை தெரிவு செய்ய 3 வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இவை நிரம்பிவிட்டால் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மையத்தில் தேர்வு எழுதவேண்டிய சூழல் உருவாகிறது.

ஜெ.ரவிச்சந்திரன்

இதனால், தேர்வுக்கு செல்ல மாணவ,மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், விண்ணப்பத்தில் செய்யும் சிறிய தவறை சரி செய்வதற்கு அபராதமாக ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை மாணவர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இதை முற்றாக ரத்து செய்ய வேண்டும். சுருக்கெழுத்துத் தேர்வில் வாசிப்பு சாதனம் (Gadget) மூலம் வாசிக்கப்படுவதால், தற்போது தேர்ச்சி பெறுவோரது எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இது நல்ல திட்டம் தான் என்றாலும், ஒரு அறையில் 40 மாணவர்களை வைத்துக் கொண்டு, அங்கு ஒரே ஒரு வாசிப்பு சாதனத்தை பயன்படுத்தினால், பல மாணவர்களுக்கு வாசிப்பது காதில் கேட்காத நிலை ஏற்படுகிறது. மேலும்,இதை கையாள தேர்வு மைய அலுவலர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை.

உதாரணமாக, நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுருக்கெழுத்து தேர்வில் ஆங்கிலம்- ஜூனியர் பிரிவில் 5,523 பேர் பங்கேற்றதில் 5,094 பேர் தேர்ச்சி பெறவில்லை, தேர்ச்சி 7.77 சதவீதம். அதேபோன்று சுருக்கெழுத்து ஆங்கிலம் ஹைஸ்பீட் பிரிவில்(நிமிடத்துக்கு 150 வார்த்தைகள்) 453 பேர் எழுதியதில் 445 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி 1.77 சதவீதம். சுருக்கெழுத்து ஆங்கிலம் ஹைஸ்பீட் (நிமிடத்துக்கு 180 வார்த்தைகள்) பிரிவில் 116 பேர் எழுதியதில் 114 பேர் தேர்ச்சி பெறவில்லை, தேர்ச்சி 1.72 சதவீதம். இதனால் சுருக்கெழுத்து தேர்வின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு குறைந்து வருகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் நிலவும் குளறுபடிகளை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சரிசெய்து, அடுத்து பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு என்றார்.

SCROLL FOR NEXT