அறந்தாங்கி அருகே திருநாளூர் தெற்கு அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை. 
கல்வி

ஸ்மார்ட் கிளாஸ் உடன் ஹைடெக்காக மாறும் திருநாளூர் தெற்கு அரசு தொடக்கப் பள்ளி: முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் தெற்கு அரசு தொடக்கப் பள்ளியை ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் முன்னாள் மாணவர்கள் மேம்படுத்தி வருகின்றனர். திருநாளூர் தெற்கு அரசு தொடக்கப் பள்ளியில் 153 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 6 ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நிதி திரட்டி ஒரு அறை ஸ்மார்ட் வகுப்பறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்விசிறிகள், சிசிடிவி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தரைதளத்தில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டிடங்கள் மராமத்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதேபோல, பள்ளி வளாகத்தில் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ள ஓட்டுக் கட்டிடத்தை மராமத்து செய்து, அதை கலையரங்கமாக மாற்றுவதற்கான பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலையரங்கமாக மாற்றி அமைக்கப்பட உள்ள ஓட்டுக் கட்டிடம்.

இதுகுறித்து திருநாளூர் தெற்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கூறியது: இந்தக் கிராமத்தில் உள்ளோரிடையே கல்வி குறித்த விழிப்புணர்வு இருப்பதால், அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இப்பள்ளியில் ரூ.2.86 லட்சத்தில் ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பயன்பாடு இல்லாத ஓட்டுக்கட்டிடத்துக்கு புதிதாக சுவர் அமைத்து, ஓடுகளை மராமத்து செய்து கலையரங்கமாக மாற்றி அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம். இங்கு, போட்டித் தேர்வு பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT