மழைநீர் சூழ்ந்துள்ள மல்லாங்கிணர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி. 
கல்வி

விருதுநகரில் மழைநீர் சூழ்ந்த அரசு மாணவியர் விடுதி - பாதை இல்லாததால் 15 ஆண்டுகளாக தொடரும் துயரம்

செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணரில் நந்திக்குண்டு செல்லும் சாலையில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு தங்கியுள்ள மாணவிகள் மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவ்விடுதியைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவிகளால் விடுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிவராமன் கூறியதாவது: மல்லாங்கிணரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி கட்டப்பட்டது முதல் 15 ஆண்டு களாக சாலை வசதி இல்லை. ஓடையைக் கடந்து மண்பாதை வழியாகவே மாணவிகள் சென்று வருகின்றனர்.

இது தொடர்பாக பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சாலை அமைக்கப் படவில்லை. அண்மையில் பெய்த தொடர் மழையால் ஓடையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓடையைக் கடந்து விடுதிக்கு மாணவிகளால் செல்ல முடிய வில்லை. அதோடு, விடுதியைச் சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், விடுதி தனித் தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால் விஷப் பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

தற்போது பள்ளிகளில் அரை யாண்டுத் தேர்வு நடைபெறுவதால் ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் தங்கியிருந்த 86 மாணவிகளும் மல்லாங்கிணரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அங்கு ஏற்கெனவே 100 மாணவிகள் உள்ள நிலையில் தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஆதி திராவிடர் மாணவியர் விடுதிக்குச் செல்ல பாதை அமைத்துக் கொடுக்குமாறு அதிகாரிகளிடமும், நிதி அமைச்சரிடமும் மனு கொடுத்துள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது விடுதியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் மாணவிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

SCROLL FOR NEXT