உதகை: உதகையில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மார்ச் மாதம் திறக்கப்படுமென பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
உதகையில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர், அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மண் சரிவை தடுக்கும் வகையில் ஒரு கட்டிடத்துக்கும், மற்றொரு கட்டிடத்துக்கும் இடையே கான்கிரீட் சுவர் அமைக்கப் பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, தற்போது கிணறு அமைத்து அதன் மூலம் நாளொன்றுக்கு 1.60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
குடிநீர் வசதிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் காமராஜர் அணையிலிருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து மார்ச் மாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் சத்திய மூர்த்தி, தொழில் நுட்ப சிறப்பு அலுவலர் விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் காசி லிங்கம், சிறப்பு தலைமைப் பொறியாளர் சத்தியவானீஸ்வரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் ஜெயலலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.