புதுப்பொலிவு பெற்றுவரும் உதகை அரசு கலைக் கல்லூரி கட்டிடம். 
கல்வி

உதகையில் பழமை மாறாமல் மிளிர தயாராகும் அரசு கலைக் கல்லூரி: ரூ.8.2 கோடியில் புதுப்பிப்பு பணி

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டிடங்களை கட்டினர். கோவை ஆட்சியராக இருந்தஜான் சலீவன், நீலகிரியை கண்டறிந்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டனைபோல் உதகை இருப்பதை அறிந்தார். பின்னர், அங்குள்ளதைபோல் இங்கும் பாரம்பரிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்தார். நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான தோடர்களிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வாங்கி, 18-ம் நூற்றாண்டில் உதகை சேரிங்கிராஸ் மேல் பகுதியில் கல்லால் ஆன தனி மாளிகையை கட்டினார் ஜான் சலீவன். இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கட்டிடத்தை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார்.நகரின் மையத்தில் சேரிங்கிராஸ் அருகே மலையில் ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டதால், இப்பகுதி ஸ்டோன் ஹவுஸ் ஹில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அப்போது, கோடை காலத்தில் ஆங்கிலேயர்களின் சென்னை மாகாணதலைமை செயலகம், உதகை கல்பங்களாவில் செயல்பட்டது. சென்னைமாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்றோ,இங்கு தங்கி அலுவல் பணிகளை கவனித்துள்ளார். இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தங்க உதகையில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.பின்னர் ஆட்சியர்பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது. கல் பங்களா,பின்னர் அரசு கல்லூரி முதல்வரின் குடியிருப்பாக மாறியது. தற்போது, இந்த கட்டிடம் அரசு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் ஆங்கிலேயர்களால்‌ கட்டப்பட்ட மணிக்கூண்டு கட்டிடம் தான் தற்போது உதகை அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடம், 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

1955-ம்‌ ஆண்டில் உயர் கல்வித்‌ துறைக்கு ‌அப்போதைய முதல்வர்‌ காமராஜர், கல்வி அமைச்சர் ‌சி.சுப்பிரமணியம்‌ ஆகியோர், இந்த புராதன கட்டிடத்தை வழங்கினர். இன்று 18 பாடப் பிரிவுகளுடன், 4300 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் 18-ம் நூற்றாண்டில் சலீவனால் ஓக் மரம் நடப்பட்டது. பின்னர், உதகை நூற்றாண்டின்போது வெலிங்டன் பிரபு, அவரது மனைவியால் இரண்டு ஓக் மரங்கள் நடவு செய்யப்பட்டன. இந்த மரங்கள் தற்போது கல்லூரியின் அமைதியான, அற்புதமான சூழலுக்கு காரணமாக உள்ளன. அன்று முதல் இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் உயர் கல்வி கனவை மெய்ப்பிக்கும் ஒரே கல்வி நிறுவனமாக இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் உதகை அரசு கலைக் கல்லூரி, ஒரு சில பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டாலும் தற்போது தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல் என 18 துறைகள் உள்ளன. இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் வரை அளிக்கப்படுகின்றன. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான எதிர்காலம் இந்த கல்லூரியில் நிர்ணயிக்கப்படுகிறது. 200-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இக்கல்லூரிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இளநிலை வன விலங்கு உயிரியல் (B.sc,Wildlife Biology), ராணுவத்தில் பணிபுரியும் வகையில் இளநிலை பாதுகாப்பியல் (B.A.Defence) ஆகிய படிப்புகள் விளங்குகின்றன.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நீலகிரி மாவட்ட மக்களின் உயர் கல்வி கனவை பூர்த்தி செய்யும் உதகை அரசு கலைக் கல்லூரியின் கட்டிடம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உதகை நகரம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு பல்வேறு விழாக்களை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, தற்போது இக்கல்லூரியை புதுப்பிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, ஜான் சலீவன் அப்போது கட்டிய கட்டிடம், அதே நிலையில், ரூ.8.20 கோடி செலவில் மீள் உருவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்ட அந்த கட்டிடத்தில் கல்லூரி முதல்வர் அலுவலகம், தமிழ், கணிதம் உட்பட 5 பாடப் பிரிவுகளுக்கான வகுப்பறைகள், நூலகம் செயல்பட்டு வந்தன. மணிக்கூண்டும் உள்ளது. இந்த கட்டிடம் மற்றும் மணிக்கூண்டு சர்வதேச அளவில் புகழ் பெற்றது. இந்த கட்டிடத்தில் பல திரைப்படங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரியமிக்க இக்கட்டிடத்தை பாதுகாக்கும் வகையிலும், அதன் பழமை மாறாமலும் புதுப்பிக்க 2020-ம் ஆண்டுதமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் நடந்த உயர் கல்வி மானியக் கோரிக்கையில், அப்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அதற்கான நிதியைஒதுக்கினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இப்பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ‘‘இந்த கட்டிடம் 1820-ம் ஆண்டில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிமென்ட் பயன்படுத்தாமல், சுண்ணாம்பு கலவையைக் கொண்டு கட்டப்பட்டது. அதேபோல், பழமை மாறாமல் பங்களா புதுப்பிக்கப்படுகிறது’’என்றனர்.

SCROLL FOR NEXT