ஒரு கட்டைச் சுவரைப் பார்த்தால் சிறுவர்கள் அதனருகில் சென்று அதன் மறுபுறத்தில் என்ன இருக்கிறது என்று ஆவலுடன் எட்டிப் பார்ப்பார்கள். பெரியவர்களுக்கும் அந்த நப்பாசை இருக்கும். கூச்சம் அவர்களைத் தடுத்துவிடும். கொலம்பஸுக்கு அதைவிடப் பெரிய அளவிலான நப்பாசை இருந்தது. அட்லாண்டிக் கடலின் மறுகரையில் இந்தியாவுக்குப் போக வழியிருக்கிறதா என்று பார்க்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அதேபோல கேப்டன் குக் என்ற ஆங்கிலேய மாலுமிக்கு பசிபிக் கடலின் தென் கோடியில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் உண்டாயிற்று. 1769-ம் ஆண்டில் அவர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்தபோது, பாலினேசிய (ஹவாய்) தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த டுப்பையா (Tupiah) என்ற பூசாரியைச் சந்தித்தார். டுப்பையா அவருக்கு ஒரு தேச வரைபடத்தைப் பரிசளித்தார். அதில் பசிபிக் தீவின் தென் பகுதியிலிருந்த எல்லாத் தீவுகளும் குறிக்கப்பட்டிருந்தன.
டுப்பையாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வழிகாட்டச் சொன்னார் குக். அவர் எந்தவிதமான கருவியின் துணையும் இல்லாமல் 300 மைல் தெற்கிலிருந்த ஒரு தீவுக்கு குக் குழுவினரை அழைத்துச் சென்றார். அங்கிருந்து வேறு பல தீவுகளுக்கும் அவர்கள் சென்றனர். இரவு, பகல் எந்த நேரத்திலும் விண்மீன்களின் துணைகொண்டு டஹிட்டி தீவு இருக்கும் திசையை அவர் சரியாகச் சுட்டிக்காட்டி குக் குழுவினரை அசரவைத்தார்.
ஆப்பிரிக்காவில் வசித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே அவர்கள் தக்கைத் தண்டுகளாலான பெரிய படகுகளில் பயணித்துத் தென் பசிபிக் கடலிலிருந்த எல்லாத் தீவுகளிலும் போய்க் குடியேறிவிட்டார்கள். அத்துடன் எந்தவிதக் கருவியின் உதவியும் இன்றி, அங்கிருந்த எந்தவொரு தீவுக்கும் செல்லக்கூடிய கடல் பாதைகளை மனதில் பதிய வைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து 2,300 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்டு நீண்ட கடல் பயணத்துக்குப் பின்னர் பசிபிக் தீவுகளுக்கு வந்தவர்கள். அதற்கும் எழுபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரையிலான ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவின் கரைகளிலிருந்து பல திசைகளிலும் கடலில் பயணம்செய்யத் தொடங்கியிருந்தார்கள். கிழக்குத் திசையில் பயணித்துப் பல நாடுகளைக் கடந்து இறுதியாகப் பசிபிக் தீவுகளை அடைந்தார்கள். கேப்டன் குக் மேற்குத் திசையில் பயணித்து அங்கே போய்ச் சேர்ந்தார். அங்கே நிகழ்ந்த ஒரு சச்சரவில் அவர் கொல்லப்பட்டார்.
மனிதர்கள் உலக வரைபடத்தை மேலும் மேலும் முழுமையானதாக ஆக்குவதற்கு முனைந்து அதுவரை போகாத இடங்களுக்குப் போகவும், ஏறாத சிகரங்களில் ஏறவும், இறங்காத கடலடித் தரைகளில் போயிறங்கவும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அத்துடன் நிலவிலும் போயிறங்கிவிட்டார்கள். செவ்வாயில் தடம் பதிக்கவும் முயன்றுவருகிறார்கள். புளூட்டோ, யுரேனஸ் போன்ற கோள்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பியிருக்கிறார்கள். ஆகாய கங்கையை அடுத்துள்ள விண்மீன் மண்டலங்களுக்கும் விண்கலங்களை அனுப்ப முயன்றுவருகிறார்கள்.
ஓரிடத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே இன்றைய மனிதர்கள் எப்பாடுபட்டாவது அங்கே போகிறார்கள். வேறு எந்த உயிரினத்துக்கும் இந்தக் குணம் கிடையாது. மனிதர்கள் மட்டுமே எல்லை தாண்டுகிறார்கள். இருக்குமிடத்தில் எவ்வளவு வளம் இருந்தாலும் புதிய இடங்களுக்குப் போகிறார்கள். இது ஓர் அண்மைக்கால நிகழ்வு.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நியாண்டர்தால் மனிதர்கள் தங்களுடைய இடத்தைவிட்டு வெளியேறிப் பரவவில்லை. கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளில்தான் நவீன மனித இனம் உலகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போய்க் குடியேறிவிட்டது. எது அதற்குத் தூண்டுகோலாயிருந்தது?
மனித மூளையிலுள்ள டோபமைன் (Dopamine) என்ற வேதிப்பொருள் கற்றல், அதனால் ஏற்படும் இன்பம் ஆகியவற்றை ஆளுகிறது. அதை DRD-4 என்ற மரபணு இயக்குகிறது. சில மனிதர்களில் அது DRD 4-7R என்ற வகையாகத் திரிகிறது. அவ்வாறானவர்கள் மொத்தத்தில் இருபது சதவீதத்தினரே. அவர்களுக்குத் துறுதுறுப்பும் ஆராய்வதில் ஆர்வமும் மிகுந்திருக்கும். அவர்கள் துணிந்து செயல்படுவார்கள்.
ஆபத்துகளை நேரடியாக எதிர்கொள்வார்கள். போகாத இடங்களுக்கெல்லாம் போவார்கள். புதிய அனுபவங்களைத் தேடுவார்கள். இயக்கம், மாற்றம், சாகசம் ஆகியவையே அவர்களுடைய இலக்குகள். மற்றவர்களைவிட அதிகமாகச் சாப்பிட்டு, அதிக உடல் வலுவுடன் இருப்பார்கள். ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் தங்கி வசிக்கத் தொடங்கிவிட்டால் வலுக்குறைந்து போவார்கள்.
7R என்ற மரபணுவை சில விஞ்ஞானிகள் ‘சாகச மரபணு’ என்று குறிப்பிடுகிறார்கள். அதற்காக அந்த மரபணு உடைய எல்லோரும் சாகசச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் சொல்ல முடியாது. அவ்வாறு சாகசம் செய்வோரில் பலருக்கு அந்த மரபணு உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். அது மூளையிலும், கைகால்களை வலுவாக்குவதிலும் செயலாற்றுகிறது. சாகசச் செயல்புரிய இவை இரண்டும் அவசியமானவை.
அதன் காரணமாகவே நீண்ட தூரம் நடக்கவும், ஓடவும் கைகளைக்கொண்டு காரியம் செய்யவும் முடிகிறது. மூளைக்கும் கை கால்களுக்கும் இடையில் ஒரு செய்தித்தொடர்பு கண்ணி உள்ளது. அதில் சதா சர்வகாலமும் செய்திகள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கின்றன. மூளை திட்டமிடுகிறது. கை கால்கள் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இதுவே மனிதன் இன்றைய வளர்ச்சியை அடைய உதவியுள்ளது. பெரிய அளவிலான மூளையும் திறமையான கைகளும் வளமான கற்பனைத் திறனுக்கு இதற்கு வழிவகுத்தன.
மனிதக் குழந்தைக்குப் பெற்றோரின் நிழலில் இருந்தவாறே புதிய சோதனைகளைச் செய்து புதிய அனுபவங்களைப் பெற உதவும் நீண்ட கால அவகாசம் கிடைக்கிறது. கொரில்லாக்களும் சிம்பன்சிக்களும் நாலு அல்லது ஐந்து வயதில் பெற்றோரைவிட்டு விலகிவிடுகின்றன. நியான்டர்தால் காலத்தில்கூட மனிதக் குழந்தைகள் பத்து முதல் 12 வயதுவரையிலான காலத்தில் பெற்றோரிடமிருந்து விலகிவிட்டன.
விலங்குக் குட்டிகளும் பறவைக் குஞ்சுகளும் விளையாடுவதன் நோக்கம் வாழ்வதற்கான பயிற்சிகளைப் பெறுவதே. அது முக்கியமாக வேட்டையாடும் திறனைக் கூர் தீட்டுவதாகவே இருக்கும். மனிதக் குழந்தைகள் கற்பிதமான சூழ்நிலைகளையும் விதிகளையும் கொண்ட விளையாட்டுகளை விளையாடும். பெரிய கோயிலைப் போல் கடற்கரையில் மணலால் கோபுரம் எழுப்ப முடியுமா என்று முயலும். அண்ணன் அளவுக்குப் பெரியவனாகிவிட்டால் சைக்கிளை ஓட்டலாமா என்று யோசிக்கும். வயதாக வயதாக இவ்வாறான சிந்தனைகள் குறைகின்றன.
புதிதாகத் திறக்கப்பட்ட ஓர் உணவு விடுதிக்குப் போவதைவிடப் பழகிய, வாடிக்கையாகப் போகிற ஓட்டலுக்கே போகலாமென்று தோன்றுகிறது. குழந்தைப் பருவத்தில் தேடல், புதுமை விரும்பல், அறிய நாட்டம் போன்றவற்றுக்கான இணைப்புகள் மூளையில் உருவாகின்றன. இம்மாதிரி இளமையில் கற்றுக்கொள்பவை, பெரியவர்களான பின் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு உத்திகளை மாற்றிக்கொள்ள உதவுகின்றன. தேடல், புதுமை விரும்பல் நாட்டங்கள் குறைகின்றன. பல இடங்களுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஊர் சுற்றுகிற ஆர்வமும் குறைந்துவிடுகிறது.
கட்டுரையாளர், அறிவியல் எழுத்தாளர்.