ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, வகுப்பை புறக்கணித்து பெற்றோருடன் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம், தொடர்புடைய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, பெற்றோருடன் பள்ளியின் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீஸார், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோர் பெற்றோர், மாணவர்களை சமாதானம் செய்தனர். அப்போது மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பெற்றோர் தெரிவித்தனர். குடிநீர், கழிவறை வசதியை விரைந்து ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு மாணவர்கள், பெற்றோர் கலைந்து சென்றனர்.