தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான விடுதி. 
கல்வி

அரசு கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதி 8 மாதமாக திறக்கப்படாததால் அவதி @ தருமபுரி

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரியில் ரூ.3.22 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு கல்லூரி மாணவர்களுக்கான விடுதி பல மாதங்களாக திறக்கப் படாததால் கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் இயங்குவதால் சுமார் 5,000 மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். தொலை தூரங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கல்லூரிக்கு வந்து பயிலும் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது.

இந்த விடுதிக் கட்டிடம் மிகவும் பலமிழந்து காணப்பட்ட நிலையில் அதை இடித்து புதிய கட்டிடம் கட்ட ரூ.3.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அதியமான்கோட்டை அருகே உள்ள சிறிய திருமண மண்டபம் ஒன்றுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டுமானப் பணிகள் நிறைவுற்று 8 மாதங்களை கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதற்கிடையில், தற்காலிகமாக திருமண மண்டபத்தில் செயல்படும் விடுதியில் போதிய கழிப்பறை, குளியலறைகள் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல, தற்காலிக விடுதிக்கும், கல்லூரிக்கும் இடையே 4 கிலோ மீட்டர் தூரம் என்பதால் கல்லூரி செல்லவும் மாணவர்கள் சிரமப் படுகின்றனர். மாணவர்கள் படும் சிரமங்களை சில மாதங்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்த தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் விடுதியை உடனடியாக திறக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதேபோல, மாணவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் விடுதிக் கட்டிடம் திறப்பதில் தாமதம் நிலவி வருகிறது.

இது குறித்து, முன்னாள் மாணவர்கள் சிலர் கூறியது: அரசு கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் முடிவுற்று 8 மாதங்களை கடந்துள்ளது. ஆனாலும், மாதம் ரூ.60 ஆயிரம் வாடகையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, இட நெரிசல் மிகுந்த திருமண மண்டபத்தில் விடுதி செயல்பட்டு வருகிறது.

அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முதல்வர் மூலம் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே, இந்த விடுதி திறப்பு விழா காண முதல்வரின் தேதிக்காகவே காத்திருக்கிறது. அரசின் மேலிட முடிவு என்பதால் மாவட்ட அளவில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், என்றனர்.

SCROLL FOR NEXT