வேலூர்: வங்கிகள் பெற்றோரின் ‘சிபில் ஸ்கோரை’ காரணம் காட்டி, அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் மறுக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நுட்பம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் 15 செவிலியர் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் சிறப்பு கல்வி கடன் முகாம் மூலம் 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகள் கல்வி கடன் பெற உதவி செய்ய வேண்டும். கல்வி கடன் மூலம் படித்து நல்ல முறையில் சமூகத்துக்கு சேவை புரிய வேண்டும். கல்வி கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து எளிய முறையில் கல்வி கடன் பெற மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கல்வி கடன் பெற்றவர்கள் பணிக்கு சென்ற பிறகு கடனை அடைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வங்கியாளர்கள் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க உதவ வேண்டும்.
மேலும், வங்கிகள் பெற்றோர் களின் ‘சிபில் ஸ்கோரை’ காரணம் காட்டி அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் மறுக்கக் கூடாது. பொருளாதார காரணங்களால் மேற்படிப்பு தடைபடக்கூடாது என்பதே இந்த முகாமின் நோக்கம். அனைவரும் விரும்பிய படிப்பும் படிக்க வேண்டும். தேவைப் படும் அனைவருக்கும் கல்வி கடன் வழங்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் கல்வி கடனை பெறுவதற்கு Vidhyalakshmi.portal என்ற இணையதளத்தில் பதிவு செய்து கல்வி கடன்களை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கல்வி கடன் வழங்குவதற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் வணங்கா முடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமாலுதின், கல்லூரி கல்வி இணை இயக்குநர் எழிலன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.