சென்னை: தமிழ்வழிப் பள்ளிகளுக்கும், மழலையர் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிக கட்டுப்பாடுகள் இன்றி உடனடி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர் பா.இறையரசன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தமிழ் ஒரு பாடம், காலை உணவுத் திட்டம் முதலியவற்றைப் பாராட்டுகிறோம். அதேநேரம், இந்த கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம். புத்தகச் சுமை 5 கிலோவுக்குள் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக மிக அதிகச்சுமை தூக்கிக் கொண்டு மாணவர்கள் மிதிவண்டியிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும், பள்ளியின் மாடிப்படிகளிலும் ஏறி இறங்கி இடர்ப்படுவதால் புத்தகச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தக சுமையை குறைக்க, சிங்கப்பூரில் உள்ளதுபோல் வகுப்பறைக்குள் அல்லது வெளியில் கூண்டு (செல்ஃப்) அமைத்து அதில் பாதி புத்தகங்களை வைத்துச் செல்லலாம். ஒருநாள் சில துறைப் (Subject) புத்தகங்கள், மறுநாள் பாதி என பாடவேளை (Periods) அமைக்கலாம். வீட்டுப்பாடம், வகுப்புப் பணி ஆகியவற்றுக்குத் தனி நோட்டுகள் அல்லது பொது (Rough)நோட்டு ஒன்று மட்டும் என ஏற்படுத்தலாம்.
தமிழ்வழிப் பள்ளிகளுக்கும், மழலையர் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிக கட்டுப்பாடுகள் இன்றி உடனடி அங்கீகாரம் வழங்க வேண்டும். சில மாணவர்கள் மட்டுமே தங்கள் தனித்திறமையால் விளையாட்டுகளில் முன்னேறி வருகிறார்கள். நாள் தோறும் விளையாட்டு என்பதற்கான நேரத்தில் அனைவருக்கும் சரிவரப் பயிற்சி அளித்தால் மாணவர்கள் உடல் நலமும் வளரும்; சிறந்த விளையாட்டு வீரர்களும் உருவாகும் வாய்ப்பு நேரும்.
ராஜராஜன் வரலாற்றைக் கூறும் பொன்னியின் செல்வன் கதைப்படமாக காமிக்ஸ் மூலம் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும். இதனால் தமிழக வரலாறு மேலும் அறியும் ஆர்வம் ஏற்படும். பரவி வரும் மாணவர் ஒழுங்கீனம், வன்முறை களைய மேல்நிலைப் பள்ளிகளில் நீதிபோதனை, இசை, கைத்தொழில் பயிற்சிகள் (தறி, மட்பாண்டம் முதலியன) முன்பு இருந்தன. சித்த மருத்துவம் (பாடநூல் நிறுவனம்: 1980இல் வெளி வந்தது. ரூ.15 விலை.) ஓகம், கராத்தே, குங்ஃபூ, சடுகுடு, தமிழிசை, கருவியிசை (குழல், வயலின்..) முதலியவற்றுடன் சிறு படைப்பயிற்சி (சாரணர், ACC, NCC), சமூகத்தொண்டுக்கழகம் முதலியன அமைக்கப் பெற வேண்டும்.
இலவசக் கல்வி வரும் வரை, மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே பள்ளி பெற வேண்டும். மூன்று நான்கு மாடிகள் கட்டி, நாள்தோறும் குழந்தைகள் பெரும் புத்தகப்பைச் சுமையுடன் பல முறை ஏறி இறங்கி சிரமப்படுவதால், லிஃப்ட் ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறை, குடிநீர், உணவறை இருக்க வேண்டும்.நம் மக்கள் குளிர்சாதன வசதி உள்ள அறைகளிலேயே, பழக்கப்பட்டவர்கள் இல்லை. கணினி அறை தவிர பிற இடங்களில் குளிர்சாதன வசதி தேவையில்லை. மாணவர்கள் சீருடை எளிதாகவும் குறைந்த விலைத் துணியிலும் இருக்க வேண்டும். காலணி, டை நம் நாட்டு மரபுக்கும் வெப்ப தட்பத்துக்கும் ஏற்றவையல்ல. செருப்பின் விலையும் குறைவு, உள்ளூர் ஏழைத் தொழிலாளிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.