அரூர்: தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இருந்து மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் அரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கௌப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரூர் அருகே உள்ள எல்லப்புடையாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இப்பள்ளியில் 165 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் கற்பித்தலை எளிமையாக்கும் வகையில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிறந்த கற்பித்தல், பள்ளி கட்டமைப்பு, சுற்றுப்புற தூய்மை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் உள்ளன. வரும்14-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விருது வழங்க உள்ளார்.