சென்னை: சிவில் நீதிபதி பணிக்கான முதன்மைத் தேர்வு சென்னையில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப் பணியிடங்கள், 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக இத்தேர்வை உயர் நீதிமன்றமே நடத்தி வந்தது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது.
அதன்படி, சிவில் நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பை கடந்த ஜூன் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த தேர்வை எழுத 12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 32 மையங்களில் கடந்த ஆக. 19-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்.11-ல் வெளியானது.
இதில் 2,544 பேர் அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இதையடுத்து, சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு நேற்று தொடங்கியது. காலையில் மொழி பெயர்ப்பு தாள் தேர்வும்,மதியம் சட்டம் முதல் தாள் தேர்வும் நடத்தப்பட்டது. மயிலாப்பூர் பிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
முதன்மைத் தேர்வு இன்றும் (ஞாயிறு) நடைபெற உள்ளது. காலையில் சட்டம் 2-ம் தாள் தேர்வும், மதியம் சட்டம் 3-ம் தாள் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி செய்யப்பட்டு பின்னர் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.