சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புத்தாக்க மைய (CFI) மாணவர்களின் வருடாந்திர ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நிகழ்வில், 73 தொழில்நுட்பத் திட்டங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி சிஎஃப்ஐ மாணவர்கள், தொழில் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிநவீனத் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினர். மாணவர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீனத் தொழில்நுட்பங்களை இதர கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்களுக்கு காட்சிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். கடந்த ஆறு மாதங்களில் சிஎஃப்ஐ போட்டிக் குழுக்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு முன்மாதிரிகளைக் கொண்ட 'போட்டிக் குழு செயல்முறை தின' (Competition Team Demo Day) நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சூரியசக்தியில் இயங்கும் ரேஸ்கார், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒலி ராக்கெட், ராணுவக் கண்காணிப்புக்கான நிலைத்த இறக்கை யுஏவி-க்கள் (ஆளில்லா விமானங்கள்), சிஎஃப்ஐ வழிகாட்டி ரோபோ, தூய எரிசக்தியுடன் இயங்கும் கப்பல்கள், கடல்சார் ஆய்வுக்காக நீருக்கடியில் இயங்கும் தானியங்கி வாகனங்கள், பிரெய்லி புத்தக முன்மாதிரி, செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சவுண்ட்ஸ்கேப்பிங் கண்கண்ணாடிகள் போன்றவை இந்நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த ஆராய்ச்சி மாநாட்டின்போது 14 தொழில்நுட்ப கிளப்புகள், 7 போட்டிக் குழுக்கள் வழங்கிய சிறப்புமிக்க 73 தொழில்நுட்பத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றது, புதிய கண்டுபிடிப்புகளில் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. இக்கண்டுபிடிப்புகளைப் பாராட்டிய சென்னை ஐஐடி முன்னாள் மாணவரும், சென்னை ஐஐடி தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப்பான ஸ்டெல்லாப்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சிஓஓ-வுமான ரவிசங்கர் ஷிரூர், "சென்னை ஐஐடி புத்தாக்க மையம் நடத்தும் 2023 ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் அதிநவீனத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சிறந்த மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். அடுத்த தலைமுறை தொழில்முனைவோரின் அனைத்து சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் நீங்கள் இங்கே காண முடியும்" எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களால் நடத்தப்படும் மிகப் பெரிய அமைப்புகளில் ஒன்றான சிஎஃப்ஐ-க்கு 3டி பிரிண்டர்கள், லேசர்கட்டர்கள், எலெக்ட்ரானிக்ஸ் வொர்க்ஸ்டேஷன்கள் போன்ற அதிநவீன வசதிகளும், நிதியுதவியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சிஎஃப்ஐ மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், மின்னணு உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொடக்கமாகவும் சிஎஃப்ஐ இருந்து வந்திருக்கிறது.
கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பதில் சிஎஃப்ஐ போன்ற அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் (புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு) பேராசிரியர் பிரபு ராஜகோபால், "சிஎஃப்ஐ-யின் சமூக மற்றும் புத்தாக்க தொழில்நுட்பங்களுக்கான ஆண்டு இடைமதிப்பாய்வுக்கு இந்த ஆராய்ச்சி மாநாடு முக்கியமான ஒன்றாகும். சிஎஃப்ஐ-யின் கிளப் குழுக்களின் ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக சர்வதேச நிகழ்வுகளில் பாராட்டைப் பெற்ற சிஎஃப்ஐ போட்டிக் குழுக்களின் அதிநவீனத் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக நடப்பாண்டில் டிரயம்ப்-உடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இந்த காட்சிப்படுத்தலில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்துறையினர் சிறந்த முறையில் வரவேற்பை அளித்திருப்பது எங்களது சிறந்த பயணத்தை உந்திச் செல்வதாக அமைந்திருக்கிறது" என்றார்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்து விவரித்த சிஎஃப்ஐ- சென்னை ஐஐடி மாணவர் நிர்வாகத் தலைவர் சார்த்தக் சவுரவ், "இந்த ஆராய்ச்சி மாநாடு மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். எங்களின் முயற்சிகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் தற்போதைய மாணவர்கள் புதுமையான முயற்சிகளில் எந்த அளவுக்கு ஊக்கமும் ஆர்வமும் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றனர். இந்தாண்டு நடைபெற்றுள்ள நிகழ்வில் தொழில்நுட்ப ரீதியாக பரந்த அளவிலான துறைகள் மற்றும் களங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். மாணவர் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களின் திட்டங்களை அளிக்க முன்வந்திருப்பது அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார். இந்நிகழ்வு சிஎஃப்ஐ-யின் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதுடன், புதிதாக வரக்கூடிய மாணவர்களிடையே தொழில்நுட்பம் மீதான ஆர்வத்தைத் தூண்டச் செய்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.