பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விடுதி மாணவிகள். 
கல்வி

அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து எச்.புதுப்பட்டியில் பள்ளி விடுதி மாணவிகள் தர்ணா

செய்திப்பிரிவு

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லா ததைக் கண்டித்து மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட மாணவிகளுக்காக எச்.புதுப்பட்டியில் மாணவியர் விடுதி உள்ளது. விடுதியில் 6-ம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை பயிலும் 56 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இவர்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நேற்று காலை காலிபக்கெட், பாத்திரங்களுடன் விடுதி எதிரில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஏ.பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா, ஊராட்சித் தலைவர் பிரபு ஆகியோரிடம் தங்களது குறைகளை மாணவிகள் தெரிவித்தனர்.

தரமற்ற உணவு வழங்குவதாகவும், போதிய கழிவறை வசதி இல்லை என்றும், கடந்த சில தினங்களாக விடுதியில் மின் மோட்டார் பழுதானதால் தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், ஒகேனக்கல் குடிநீர் கடந்த 10 நாட்களாக வழங்கவில்லை என்றும் மாணவிகள் புகார் கூறினர்.

தொடர்ந்து, அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் (தனி) (பொறுப்பு) சின்னா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என வட்டாட்சியர் வாக்குறுதி அளித்ததன் பேரில் மாணவிகள்போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT