தாம்பரம்: தாம்பரம் கடப்பேரியில் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன. இதில் தற்போது, 212 மாணவர்கள் பயின்று வருகின்றனர். போதிய இடவசதி, கட்டமைப்பு வசதி இல்லாததால் பலர் தனியார் பள்ளியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை ஒதுக்கி அதற்கான ஆணையை வழங்கி யிருந்தார். மேலும் பள்ளி கட்டிடம் கட்ட 97 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி சார்பில், கடப்பேரியில் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஜன.30-ம் தேதி நடைபெற்றது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பங்கேற்று பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட வகுப்பறை கட்டுமான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு பாதியில் நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.பி. நிதி ஒதுக்கிய நிலையில், அதற்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, பணி தொடங்கிய ஒப்பந்ததாரர் தரப்பிடம் விசாரித்த போது, 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டிடப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம், அரசிடம் இருந்து முதல் தவணை நிதி வழங்கப்படவில்லை.
நாங்கள் சொந்த செலவில் பள்ளி கட்டிடங்கள் முழுவதும் கட்டி முடித்துவிட்டால் அரசு தரப்பில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். அதனால் தற்போது பணி நிறுத்தப்பட்டு அரசிடம் இருந்து வரும் நிதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹேமந்த் குமார் கூறியது: இடநெருக்கடியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தற்போது அது பாதியிலேயே நிற்கிறது. நிதி பிரச்சினை காரணமாக கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டி.ஆர் பாலு எம்.பி. நிதி வரும் வரை மாநகராட்சியின் கல்வி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கலாம். பின்னர் எம்.பி. நிதி வந்தவுடன் அந்த பணத்தை கல்வி நிதியில் சேர்க்கலாம். மாநகராட்சி இதனை செயல்படுத்த முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் செங்கல் பட்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பள்ளி கட்டிட பணிகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். மேலும், கூடுதல் கட்டிடம் கட்ட அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
கட்டுமான பணியை மேற்பார்வை செய்யும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டபோது, டி.ஆர்.பாலு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியில் 3 வகுப்பறை கட்டிடம், 1,600 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர், 80 சதவீத பணிகளை முடித்து விட்டார். தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள ஒரு பகுதி நிதியை விடுவிக்கும்படி கேட்டார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநருக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி கடிதம் எழுதியுள்ளோம். மேலும், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய தொகுதி மேம்பாட்டு நிதி வராததால் நிதி வழங்க இயலாது என தெரிவித்துவிட்டனர். இதனால் பள்ளி கட்டிடம் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. மேலும், 7 வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.