சென்னை: இன்றைய மாணவர்கள் நற்சிந்தனையோடு நல்ல செயல்களை செய்துவருவது நாளையசமுதாயத்துக்கான நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது. அப்படியான செயல்களைச் செய்யும் சிலரைப் பற்றி அறிந்துகொள்வோம்.
இயற்கையை கொண்டாடுவோம்: விருதுநகரில் உள்ள ‘ஆலமரம்’ அமைப்பு, கடந்த 127 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பின் மூலமாக இதுவரை 3,000 மரக்கன்றுகள், 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் திருவள்ளுவர் வித்யா சாலையில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவர் மூ.ஈழவளவன், 8-ம் வகுப்பு மாணவர் பி.வெற்றிவேல் ஆகியோர் ‘ஆலமரம்’ அமைப்பின் நிகழ்வில் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வருவதுடன், தங்களது நண்பர்கள் பலரையும் நற்காரியத்தில் ஈடுபட அன்போடு அழைத்துச் செல்கின்றனர்.
நண்பர்களுக்கு துணை நிற்போம்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகேயுள்ள சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி சுவேதா, தனியார் நிறுவன ஊழியரான தனது தந்தை, தின்பண்டங்கள் வாங்கிடக் கொடுக்கும் காசுகளைச் சேர்த்து வைப்பார். தான் முன்பு படித்த சென்னீர்குப்பம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 20 மாணவர்கள், நீண்ட தொலைவில் இருந்து பள்ளிக்கு நடந்துவரச் சிரமப்பட்டதை அறிந்தார். அப்படிப்பட்ட 2 மாணவர்களுக்கு மாதந்தோறும் வேன் கட்டணத்தை, தனது சேமிப்பில் இருந்து செலுத்தி வருகிறார் சுவேதா.
இலங்கைக்கு உதவும் இதயம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி கோபிகாஸ்ரீ, சில மாதங்களாக சைக்கிள் வாங்குதற்காக உண்டியலில் பணம் சேமித்து வந்தார். அப்படி சேமித்த பணம் ரூ. 2,002-ஐ, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்து, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் மக்களுக்காக அனுப்பும்படி கூறியுள்ளார்.
வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம்...: இதுபோல நீங்கள் செய்துவரும் செயல்களைப் பற்றி எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நீங்கள் செய்துவரும் சிறப்பான செயலை பலரும் அறிய வெளிச்சப்படுத்துவதற்காகவே ‘இந்து தமிழ் திசை’யும், ‘வாக்கரூ’ நிறுவனமும் இந்த ‘நற்சிந்தனை நன்னடை’ கவுரவ மேடையை அமைத்துள்ளது.
வாருங்கள்… நற்சிந்தனையோடு நன்னடை போடுவோம்.
நீங்கள் செய்துவரும் நற்செயலை எழுதி, அதற்கான படங்களையும் இணைத்து nne2023@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ‘நற்சிந்தனை – நன்னடை’,ஆசிரியர், `இந்து தமிழ் திசை' நாளிதழ், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 எனும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.