கடலூர்: ‘அயல் பணி’ என்று அரசு கல்லூரிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அப்பல்கலைக்கழகத்துக்கே திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்ற குரல் அரசு கல்லூரிகளில் ஓங்கி ஒலித்து வருகிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1998 முதல் 2008-ம் ஆண்டு வரை இருப் பிலுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகையாகவும், போதிய பணி பளுவை பரிசீலனை செய்யாமலும் தமிழக அரசின் சட்டத்திட்டத்தையும், இட ஒதுக்கீடு கொள்கையையும் பின்பற்றப்படாமலும் மிகை பேராசிரியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டனர். இதன் காரணமாக இப்பல்கலைகழகத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இச்சூழலில் 2013-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் இப்பல்கலைக்கழகத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகைப் பேராசிரியர்களை, ‘அயல் பணி’ என்ற ஒப்பந்த அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு பிற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால், ஒப்பந்த காலமான மூன்றாண்டுகள் முடிந்தும் மீண்டும் அப்பல்கலைக்கழகத்துக்கு அவர்களை திரும்ப எடுத்துக் கொள்ளாமல் இன்று வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கால நீட்டிப்பினை அரசு வழங்கி வருகிறது.
இந்த செயற்பாடு, தமிழகத்தின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் கல்விப் பணிகளில் பல்வேறு குழப்பங்களையும் தேவையற்ற சங்கடங்களையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மிகைப்பணியில் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களை திருப்பி அப்பல்கலை கழகத்துக்கே அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக அரசின் உயர் கல்வித்துறை இதை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது அரசு கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் கூறுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட மிகை பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எவ்விதமான அரசின் நெறிமுறைகளையும் பல்கலைக்கழக மானிய குழுவினுடைய நெறி முறைகளையும் பின்பற்றாமலும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைகளையும் பின்பற்றாமலும் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களை அரசு கல்லூரிகளில் நிரந்தரமாக பணியமர்த்தினால் சமூக நீதியின் பாதுகாவலராக விளங்கும் நமது தமிழக அரசினுடைய சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாக அமைந்து விடும்.
இத்துடன் பேராசிரியர்களுக்கான கல்வி, தகுதி யான செட் (SET), நெட் (NET) போன்றவற்றை முடித்து விட்டு முனைவர் பட்டங்களையும் பெற்று தகுதியுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பே இனி வராதோ என்ற மனச் சோர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலர் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கல்லூரிகளிலும் பிற இடங்களிலும் பணிகளில் உள்ளனர்.
இவர்கள் அரசு பணிக்காக காத்திருக்கும் சூழலில், அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் இம்முயற்சி அமைந்து விடும் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் நடைமுறை உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் போது முறையான கல்வித் தகுதியுடையவர்களுக்கு வாய்ப்பு கிடைப்ப தோடு மட்டுமல்லாமல் இட ஒதுக்கீடும் சமூக நீதியும் பாதுகாக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் முறைக்கு முற்றிலும் மாறாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகை பேராசிரியர்களை அரசு கல்லூரிகளில் திணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
எனவே, தமிழக அரசு உடனடியாக அயல் பணியில் நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்களை அப்பல்கலைக்கழகத்துக்கே திரும்ப அழைத்து கொண்டு, அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும்” என்கிறார்.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம் கேட்ட போது, “அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி 4 ஆயிரம் பேராசிரியர்கள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் நியமிக்கப்படுவார்கள். மேலும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார். அதே நேரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ‘அயல் பணி’ குறித்து அமைச்சர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
இந்தச் சூழலில், அயல் பணியில் சென்ற பேராசிரியர்கள் தரப்பில் இதுதொடர்பாக கேட்ட போது, “ கடந்த 2016-ம் ஆண்டு முதல், ‘அயல் பணி’ என்ற பெயரில் நாங்கள் பந்தாடப்பட்டு வருகிறோம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பேராசிரியர்களின் தேவை உள்ளது. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வரும் நாங்கள் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கே செல்ல விரும்புகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்