புதுச்சேரி: தமிழ் பாட நேரத்தை குறைத்து, மொழிப்பாடம் கட்டாயம் இல்லை என்று நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக்கொள்கை அமலாக்கத்தைக் கண்டித்து புதுச்சேரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் புதிய தேசியகல்விக் கொள்கையை எதிர்த்து புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளங்கலை பாட அட்டவ ணையில் தமிழ்மொழி பாடத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட் டுள்ளதை சுட்டிக்காட்டி பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவிகள் இரு தினங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, ஆளுநர் தமிழிசையை சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றையும் அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆளுநர் தமிழிசை, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்புகளை எடுத்துக் கூறி, போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். இந்த நிலையில், புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்து சுதேசி மில் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு நிறுவனர் சுவாமி நாதன் தலைமை வகித்தார். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இளங்கலை பாடப் பிரிவுகளில் தமிழ் பாடம் 4 பருவங்களாக இருந்ததை 2 பருவங்களாக குறைக்க கூடாது. பருவத்துக்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ் பாடத்தை 8 மணி நேரமாக குறைக்க கூடாது.
தமிழ் இலக்கிய ஆவணங்களை பயிலும் முதுகலை பட்டப் படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் சங்கங்கள், சமூக நல அமைப்பினர் பங்கேற்றனர்.