சென்னை: சந்திரயான் திட்டங்கள் தொடர்பாக ‘உங்கள் சந்திரயான்’ என்றஇணையதளம் மற்றும் சிறப்பு பாடத் திட்டங்களை கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்துபல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு, யுஜிசி செயலர் சுதீப்சிங் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சந்திரயான்-3 வெற்றியானது இளம் தளமுறையினரிடம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை விதைத்திருக்கிறது. இதனால் மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பாடத் திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையொட்டி, மத்திய கல்விஅமைச்சகம் சந்திரயான் தொடர்பான பாடத் திட்டங்கள் மற்றும்இணையதளத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது.
அந்தவகையில் ‘உங்கள் சந்திரயான்’ என்ற புதிய இணையதளத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த இணையதளத்தை டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் சந்திரயான் திட்டத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்க முடியும். அதற்கேற்ப 10 சிறப்பு பாடத் திட்டங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி அமைச்சகத்தால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள ‘உங்கள் சந்திரயான்’ இணையதளம் குறித்தும், அதன் சிறப்புபாடத்தி ட்டங்கள் தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தெரியப்படுத்த வேண்டும். அதன்மூலம் சிறப்பு பாடத் திட்டங்களில் ஆர்வமுள்ள மாணவர்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.