கல்வி

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ | மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்வதை விட்டுவிட வேண்டும்: துறை சார்ந்த அதிகாரிகள் அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களும், பல்வேறுஅரசுத் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக்கலை ஆகியஉயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம்காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணையவழி வெப்பினார் கடந்தஅக். 14, 15 ஆகிய நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.

இந்த இணையவழி நிகழ்வை ஒருங்கிணைத்து கலந்துரையாடிய ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசியதாவது: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை கட்டமைத்ததில் வெண்மைப்புரட்சி உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்ப புரட்சிகளுக்கு பெரும் பங்குண்டு. பொறியியல் பட்டதாரிகள் இந்திய அரசின் உயர்அதிகாரிகளாக பங்காற்ற வாய்ப்பாக அமைவது இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வாகும். யுபிஎஸ்சிநடத்தும் இந்த தேர்வையும், அதற்கான தயாரிப்புகளையும், தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் பணி வாய்ப்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

நமது இளம் தலைமுறையினர் முப்படைகளில் இணைந்து தேசப்பணிகளை ஆற்றிட யுபிஎஸ்சி நடத்தும் என்டிஏ மற்றும் சிடிஎஸ் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றிபெற்று முப்படை அதிகாரிகளாக பணியாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அறிவியல் அதிகாரி ஆர்.தீபக் பேசியதாவது; சிறுவயதிலிருந்தே எனக்குள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுமென்கிற எண்ணமிருந்தது. ரயில்வேயில் பணியில் சேர்ந்தபோது, எனது உயர் அதிகாரிகளைப்பார்த்து, நாமும் ஒருமுறை முயன்றுபார்க்கலாமே என்றுதான் தேர்வெழுதி, அதில் வெற்றி பெற்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒழுங்குமுறை ஆணையத்தில் அறிவியல் அதிகாரியாகப் பணியேற்றேன்.

மதிப்பெண்களை மட்டுமே மனதில்கொண்டு வெறுமனே மனப்பாடம் செய்கிற மனநிலையிலிருந்து மாணவர்கள் வெளிவர வேண்டும். ஒவ்வொரு மாணவரும்தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒருவிளையாட்டில் ஆர்வத்தைச் செலுத்துவது, அவர்களது தனித்திறன் வெளிப்பாட்டுக்கு மிகுந்தஉதவியாக இருக்கும். பிளஸ் 2தேர்வில் கணிதம், இயற்பியலில் குறைவான மதிப் பெண்களைப் பெற்றிருந்தாலும் ஐஇஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியும்,

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கர்னல் என்.செல்வகுமார் பேசியதாவது: ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த நான், தேர்வில் வெற்றி பெற்று, என்டிஏ-வில் பணியில் சேர்ந்தேன். என்டிஏ அல்லது சிடிஎஸ் என எதன் மூலமாக வந்தாலும் நிரந்தரப் பணி மற்றும் குறுகிய காலப் பணி எனஇருவகையான பணிகள் உள்ளன. நிரந்தரப் பணியில் குறைந்தது 20 ஆண்டுகளும், குறுகிய காலப் பணியில் 10 முதல் 14 ஆண்டுகளும் பணியாற்றலாம். ஏர்ஃபோர்ஸ் அகாடமி ஏர்ஃபோர்ஸ் அதிகாரிகளுக்கும், இந்தியன் நேவல் அகாடமியானது நேவல் அதிகாரிகளுக்குமான பயிற்சியை அளிக்கிறது.

முப்படைகளில் அதிகாரிகளாகப் பணிகளில் சேர விரும்புபவர்கள், அதற்கான தேர்வுகளை எழுதி, அதில் தேர்வாக வேண்டும். அடுத்தடுத்த படிநிலைகளில் உள்ளபணிகளுக்கும் முயற்சி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவாக, நிகழ்வில் பங்கேற்றமாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில்களை அளித்தனர்.

இரு நிகழ்வுகளையும் பார்க்கத் தவறியவர்கள் https://www.htamil.org/DNKPS02E07, https://www.htamil.org/DKNPS02E08 ஆகிய இணைப்புகளின் மூலமாக அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து பார்த்து, பயனடையலாம்.

SCROLL FOR NEXT